உதகையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் பேரிடர் ஒத்திகை


உதகை: நீலகிரி மாவட்டம், உதகை ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தினர்.

இதனைப் பார்வையிட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நமது மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் குழுவினர் 30 பேருடன் இணைந்து மாவட்ட தீயணைப்புத் துறையினரின் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மேலும், பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவியர் மண்சரிவு உட்பட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களை சமாளிக்க மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், மேல் கூடலூர் பகுதியிலுள்ள கோக்கால் கிராமத்தில் குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் சேதங்கள் குறித்து புவியியல் வல்லநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோக்கால் பகுதியிலுள்ள பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

நிகழ்ச்சியில், உதகை கோட்டாட்சியர் மகராஜ், தேசிய மீட்புக் குழுவின் துணை கமாண்டன்ட் ஸ்ரீதர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை உதவி மாவட்ட அலுவலர் (பொ) தவமணி, உதகை வட்டாட்சியர் சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x