கும்பகோணம் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: திமுக, காங்கிரஸ் புறக்கணிப்பு


கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி கூட்டரங்கில் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமல் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மேயர் சரவணன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதான கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தனர். அதிமுக உறுப்பினர்கள் ஆதிலட்சுமி, கவுசல்யா, குமரேசன் மற்றும் கம்யூனிஸ்ட் உறுப்பினர் செல்வம் ஆகிய 4 பேரும் மேயர் சரவணனும் மட்டுமே கூட்ட அரங்கில் அமர்ந்திருந்தனர்.

சுமார் 1 மணி நேரம் காத்திருந்தும் மற்ற கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்துக்கு வராததால் 12 மணிக்கு ஆணையர் ஆர்.லட்சுமணன் வந்தவுடன் கூட்டம் தொடங்கியது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேயர் சரவணன், "கும்பகோணம் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இது என்பதால் அனைத்து உறுப்பினர்களும் நிச்சயம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்" என்றார்.

கூட்டத்தில் பங்கேற்காத திமுக துணை மேயர் சு.ப.தமிழழகன், "கூட்டம் நடத்துவது தொடர்பாக மற்ற கட்சி மாமன்ற உறுப்பினர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால் மேயர் தன்னிச்சையாக கூட்டம் நடத்தியதால் நாங்கள் பங்கேற்கவில்லை" என்றார்.

கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ் உறுப்பினர் அய்யப்பன், "மேயர் தன்னிச்சையாக நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் எனக் கட்சி மேலிட பொறுப்பாளர்கள் உத்தரவிட்டதால் நான் கலந்து கொள்ளவில்லை" எனத் தெரிவித்தார்.

x