மேயர், அதிகாரிகள் இல்லாவிட்டாலும் குறைதீர் கூட்டம் தடங்கல் இல்லாமல் நடத்துவதற்கு மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்கிழமையில் ஒவ்வொரு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டங்களில் மேயர், மாநகராட்சி ஆணையாளர், மண்டல உதவி ஆணையர் மற்றும் மற்ற மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெறுகின்றனர்.
உனடியாக தீர்வு காணப்படக்கூடிய மனுக்களுக்கு இந்த முகாமிலேயே நிவாரணம் கிடைக்கிறது. மற்ற மனுக்களை அதிகாரிகளிடம் மேயர் விசாரிக்க சொல்லி அடுத்த குறைதீர் கூட்டம் வருவதற்குள் சம்பந்தப்பட்ட மனு கொடுத்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்நிலையில் சமீப காலமாக செவ்வாய்கிழமை தோறும் மண்டல குறைதீர் கூட்டம் முறையாக நடப்பதில்லை. மேயர், ஊரில் இல்லாவிட்டால் இந்த குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.
இந்த வாரம் கிழக்கு மண்டலம்(1வது மண்டலம்) அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்து. இந்த மண்டலத்தின் உதவி ஆணையர் ஒய்வு பெற்றுவிட்டார். அவர் இல்லாததால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஒரு அதிகாரி இல்லாவிட்டால் அவரது கீழ்நிலை அதிகாரியை கொண்டு மாநகராட்சி நிர்வாகம் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி நிர்வாகத்தினர் எந்த முயற்சியும் செய்யாமல் கூட்டத்தை ரத்து செய்து விட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை கூட்டத்தில் குறைதீர் கூட்டம் தவறாமல் இருக்கிறது. ஆட்சியர் இல்லாவிட்டாலும் அவரது பொறுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர், உதவி ஆட்சியர் யாராவது இருந்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெறுகின்றனர். அதுபோல், மேயர் ஊரில் இல்லாவிட்டாலும் துணை மேயர், மாநகராட்சி ஆணையாளர் இல்லாவிட்டால் துணை மேயர் வைத்து இதுபோன்ற குறைதீர் கூட்டங்கள் தடைப்படாமல் நடக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதையும் வாசிக்கலாமே...
சிங்கிள் டீ குடிக்கிறதுல இவ்வளவு ஆபத்தா... உயிரை விலை பேசும் ஆய்வு முடிவுகள்!