சென்னை: சென்னை மாதவரத்தில் 150 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன், அலுவலகம், குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப நகரம் அமைப்பதற்கான `மாஸ்டர் பிளான்' தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
சென்னையில் கடந்தாண்டு மார்ச் 23-ம் தேதி, தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் நடைபெற்ற தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் பயிற்சி மாநாட்டை (யுமாஜின்) காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர், “தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளதன் தொடர்ச்சியாக, சென்னை, கோயம்புத்தூர், ஒசூர் பகுதிகளில் ‘டெக்சிட்டி’ என அழைக்கப்படும், தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை தமிழக அரசு தொடங்கும். இந்த நகரங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொழில்முனைவோரை ஒன்றிணைக்கும் மையங்களாக விளங்கும்” என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து, சென்னை மாதவரம் தாலுகாவில் 150 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, தற்போது தமிழ்நாடு தொழில்நுட்ப நகரத்தை உருவாக்குவதற்கான ‘மாஸ்டர் பிளான்’ தயாரிப்பதற்கு ஒப்பந்தத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) கோரியுள்ளது.
இந்த தொழில்நுட்ப நகரம் உள்நாடு மற்றும் அயல்நாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறை, பின்டெக், டீப்டெக் மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்காக உருவாக்கப்படுகிறது.
அலுவலகத்துக்கான அமைவிடங்களும், குடியிருப்புகளும் இணைந்த வகையில் இந்த நகரம் அமைக்கப்படுகிறது. இந்த வளாகத்தில் பல்வேறு திறன்மிகு புத்தாக்க மையங்கள், தரவு மையப்பூங்கா உலகத்தரத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை பெருக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்: இந்த தொழில்நுட்ப நகர வளாகத்தில், அலுவலகம், குடியிருப்பு, வர்த்தக மையங்கள் நடந்து செல்லும் தொலைவில் அமைக்கப்பட உள்ளன. இதில் உள்ள தரவு மையப்பூங்கா, அதிநவீன கணினி, போதிய சேமிப்பு தளம், பல நிலைகள் கொண்ட பாதுகாப்பு வசதி, பேரிடர் மீட்பு வசதி, குறைந்த மின் பயன்பாடு, அதிவேக இணைய வசதி ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுக்கான வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
முதல் தர அலுவலக வளாகம் அனைத்து கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக இந்த நகரத்தில் உருவாக்கப்படுகிறது. குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சுற்றுச்சூழல் பூங்காக்கள், விளையாட்டு வளாகம், பொழுதுபோக்கு பகுதிகள் ஆகியவை இந்த நகரத்தில் அமையும்.
மேலும், ஒருங்கிணைந்த சாலை மற்றும் மெட்ரோ போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம், தண்ணீர், குழாய் மூலம் சமையல் எரிவாயு வசதிகள் அமைந்திருக்கும். இதுதவிர, ஷாப்பி்ங் மால்கள், சில்லறை கடைகள், ஓட்டல்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கியிருக்கும் என ஒப்பந்தப் புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.