புதுச்சேரி ஆளுநராக பதவியேற்றார் கைலாஷ்நாதன்: முதியோர் உதவித்தொகை கோப்பில் முதல் கையெழுத்து


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு நேற்று பதவிப்பிரமாணம் செய்துவைத்து, வாழ்த்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ணகுமார். உடன், முதல்வர் ரங்கசாமி. படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் நேற்று பதவியேற்று, முதியோர் உதவித்தொகை தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுவை பொறுப்பு ஆளுநர் பதவி கூடுதலாக அளிக்கப்பட்டது. சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரிக்கு தனி ஆளுநர் இல்லாமல், பொறுப்பு ஆளுநர்களே நிர்வகித்து வந்தனர்.

இந்நிலையில், புதுவை பொறுப்பு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாஷ்நாதனை, புதுச்சேரி ஆளுநராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்தார்.

ஐஏஎஸ் அதிகாரியான கைலாஷ்நாதன் குஜராத்தில் பணிபுரிந்தபோது, அங்கு முதல்வராக இருந்தநரேந்திர மோடிக்கு நெருக்கமானார். குஜராத் முதல்வர் அலுவலகத்தில் இவருக்கு தனி பொறுப்பு வழங்கப்பட்டது. குஜராத்தில் 18 ஆண்டுகள் பணியில் இருந்த அவர், கடந்த ஜூன் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார்.

தற்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கைலாஷ்நாதன் ஆளுநர்மாளிகையில் நேற்று பதவியேற்றார். தலைமைச் செயலாளர் சரத்சவுகான், புதிய ஆளுநராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டதற்கான குடியரசுத் தலைவரின் உத்தரவை வாசித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) கிருஷ்ணகுமார், புதிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய் ஜெ.சரவணன்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, முன்னாள் முதல்வர்நாராய்ணசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், உயரதிகாிகள் உள்ளிட்டோர் கைலாஷ்நாதனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து தனது அறைக்குச் சென்ற ஆளுநர், முதியோர் உதவித்தொகை தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார். பின்னர், விருந்தினர்களுடன் தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

இடம் மாறும் ராஜ்நிவாஸ்: புதுச்சேரி ராஜ்நிவாஸ் (ஆளுநர்மாளிகை) மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், பழைய சாராய வடி ஆலை இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்துக்கு ராஜ்நிவாஸ் மாறுகிறது. அந்த இடத்தை புதிய ஆளுநர் சென்று பார்த்துள்ளார். அந்த இடத்துக்கு விரைவில் ஆளுநர் மாளிகை மாற உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

x