வினேஷ் போகத் தகுதி இழப்பு சர்ச்சை முதல் வங்கதேச இடைக்கால அரசு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதி நீக்கம்: ஒலிம்பிக் மல்யுத்தத்தில் செவ்வாய்கிழமை இரவு நடந்த பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுவை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

ஆனால், இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 9 மணியளவில் நடந்த உடல் எடை தகுதி பரிசோதனையில், நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி 100 கிராம் எடையளவு கூட இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் அவரது பதக்கக் கனவு முற்றிலும் தகர்ந்தது.

விக்னேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல்: பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “வினேஷ்... நீங்கள் சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமிதம். ஒவ்வொரு இந்தியருக்குமான உத்வேக அடையாளம் நீங்கள். இன்றைய பின்னடைவு வலியைத் தருகிறது. நான் அனுபவிக்கும் விரக்தியை வார்த்தைகளால் விவரிக்க முயற்சிக்கிறேன். அதேவேளையில், நீங்கள் மீண்டெழுதலின் அடையாளம். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளுதல் எப்போதுமே உங்களது இயல்பாக இருந்துள்ளது. வலிமையுடன் மீண்டு வாருங்கள். உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

மக்களவையில் அமைச்சர் விளக்கம்: வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை மக்களவையில் விளக்கினார். அப்போது அவர், “நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் தகுதி நீக்கம் தொடர்பாக ஐக்கிய மல்யுத்த கூட்டமைப்பிடம் இந்திய மல்யுத்த சங்கம் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. பிரதமர் மோடி இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரிடம் பேசியுள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கான ஆயத்த பயிற்சியாக இருக்கட்டும், முன்னேற்பாடுகளாக இருக்கட்டும், அனைத்திலும் இந்திய அரசு முழு ஆதரவு கொடுத்தது. அவருக்காக தனிப்பட்ட அலுவலர் கூட பணியமர்த்தப்பட்டார். வினேஷுக்கு தேவையான அனைத்து நிதியுதவிகளையும் செய்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

மருத்துமனையில் வினேஷ் போகத்: இதனிடையே, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவரது உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார். இது தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகின.


சந்தேகம் எழுப்பிய விஜேந்தர் சிங்: “இது இந்தியா மற்றும் இந்திய மல்யுத்த வீரர்களுக்கு எதிரான மிகப் பெரிய சதி. யாரோ ஒருவருக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருந்திருக்கிறது. அதனால்தான் இந்த தகுதி நீக்கம் அரங்கேறியுள்ளது என நினைக்கிறேன்” என குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய குத்துச்சண்டை வீரரும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான விஜேந்தர் சிங் அளித்துள்ள பேட்டிகளில், “இது இந்தியா மற்றும் இந்திய மல்யுத்த வீரர்களுக்கு எதிரான மிகப் பெரிய சதி. வினேஷ் போகத் களத்தில் செயல்பட்ட விதம் நிச்சயம் பாராட்டத்தக்கது. சிலரால் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. விளையாட்டு வீரர்களாகிய எங்களால் ஒரே இரவில் 5 முதல் 6 கிலோ எடையை குறைக்க முடியும் எனும்போது, 100 கிராம் எடையால் என்ன பிரச்சினை?

யாரோ ஒருவருக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருந்திருக்கிறது. அதனால்தான் இந்த தகுதி நீக்கம் அரங்கேறியுள்ளது என நினைக்கிறேன். 100 கிராம் எடையை குறைக்க வினேஷ் போகத்துக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒலிம்பிக்கில் பங்கேற்றவன் என்ற முறையில் இதுபோன்ற சம்பவத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. சதி என நான் சொன்னது, இந்தியா விளையாட்டு துறையில் முன்னேற்றுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் செய்த செயலாக இருக்கலாம். வினேஷ் போகத் நிறைய சிரமங்களை எதிர்கொண்டார்” என்று கூறியுள்ளார்.

சென்னை மாதவரத்தில் 150 ஏக்கரில் தொழில்நுட்ப நகரம்: சென்னை மாதவரத்தில் 150 ஏக்கரில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புடன் அலுவலகம், குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப நகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.

இந்த நகரமானது அலுவலகத்துக்கான அமைவிடங்களும், குடியிருப்புகளும் இணைந்த வகையில் அமைக்கப்படுகிறது. இந்த வளாகத்தில் பல்வேறு திறன்மிகு, புத்தாக்க மையங்கள் உலகத்தரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நகரத்தில், தரவு மைய பூங்கா மற்றும் உலகத்தரத்திலான புத்தாக்க மையம் ஆகியவை அமைகிறது. இதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு: ‘தி கோட்’ பட ப்ரமோஷன் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் படத்தின் ப்ரமோஷனுக்காக தமிழக வெற்றிக் கழகம் பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை அடுத்து ‘தி கோட்’ படத்தின் ப்ரமோஷன் பணிகளில் நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். முக்கியமாக, படத்துக்காக தயாரிக்கப்படும் பேனர்களில், தமிழக வெற்றிக் கழகம் பெயரை தவிர்த்து, தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரையே நிர்வாகிகள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

வயநாடு துயரம்: ராகுல் காந்தி வலியுறுத்தல் -வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, “இது மிகப் பெரிய பேரழிவு. மத்திய அரசு ஒருங்கிணைந்த மறுவாழ்வுக்கான நிதி உதவியை வழங்க முன்வர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் இடிந்த தங்கள் வீடுகளை கட்டிக்கொள்வது உட்பட அனைத்துவிதமான மறுவாழ்வு உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும். அதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இன்னும் குறிப்பாக, வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறினார்.

முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு! - நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வியாழக்கிழமை பதவியேற்கும் என்று வங்கதேச ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ​​"இடைக்கால அரசு வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்துகொள்ள வாய்ப்புள்ளது. இடைக்கால அரசின் ஆலோசனைக் குழுவில் 15 உறுப்பினர்கள் இருக்கலாம்.

நாடு முழுவதும் நிலைமை கணிசமாக மேம்பட்டு வருவதால், மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் இயல்பு நிலை திரும்பும். கடந்த சில நாட்களாக குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தப்ப விடமாட்டோம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விமானப் படை மற்றும் கடற்படைத் தளபதி என்னோடு இருக்கிறார்கள். நாங்கள் ஒன்றாகச் செயல்படுகிறோம்" என தெரிவித்தார்.

தற்போது ஐரோப்பிய நாடு ஒன்றில் இருக்கும் முகம்மது யூனுஸ் உடனடியாக நாடு திரும்புகிறார். இதனிடையே, அவர் வெளியிட்ட செய்தியில், “நமது புதிய வெற்றியை சிறந்த முறையில் பயன்படுத்துவோம். நமது தவறுகளால் இதனை நழுவ விடக்கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண்டும். வன்முறையை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஏழை மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு வருபவராக அறியப்படும் முகம்மது யூனுஸ், அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக.13-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்: தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறவுள்ளது.

x