கோவையில் ஆகஸ்ட் 9, 10-ம் தேதிகளில் அகில இந்திய பருத்தி மாநாடு!


கோவை: அகில இந்திய பருத்தி மாநாடு ஆகஸ்ட் 9,10-ம் தேதிகளில் நடக்கிறது.

கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள ‘சைமா’ வளாகத்தில், இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கோவையை தலைமையாக கொண்டு செயல்படும் இந்திய பருத்தி கூட்டமைப்பு (ஐசிஎப்) மற்றும் பஞ்சாப்பை தலைமையாக கொண்டு இயங்கும் இந்திய பருத்தி சங்கம் (ஐசிஏஎல்) ஆகிய அமைப்புகள் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அகில இந்திய பருத்தி மாநாடு நடத்தப்படுகிறது.

ஆறாவது பதிப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டலில் ஆகஸ்ட் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. 'பருத்தி - எதிர்காலத்துக்கான நிலையான நூற்பொருள்' எனும் கருவில் இந்த மாநாடு நடைபெறும். இத்துடன் உலக அரங்கில் பருத்தியின் நிலை மற்றும் பருத்தி சார்ந்த தொழில்துறைக்கு உள்ள சவால்கள் குறித்தும் இந்த நிகழ்வில் விவாதிக்கப்படும். மொத்தம் 7 அமர்வுகளில் வெவ்வேறு முக்கிய தலைப்புகளில் தொழில்துறை வல்லுநர்கள், பல்வேறு பருத்தி சார்ந்த சங்கங்கள் அமைப்புகளின் முக்கிய உறுப்பினர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

400-க்கும் மேற்பட்ட பருத்தி துறை சார்ந்த பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வு மூலமாக இந்த துறைக்கு மாநில,மத்திய அரசுகளிடம் இருந்து தேவைப்படும் உதவிகளை குறித்தும் விவாதிக்க உள்ளனர். சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் ஜவுளி ஆணையர் ரூப் ராஷி, கவுரவ விருந்தினராக மத்திய பிரதேச அரசின் வேளாண்துறை செயலாளர் செல்வேந்திரன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் கே.ஜி. குழுமத்தின் தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன், எல்.எஸ்.மில்ஸ் நிறுவனத்தின் தலைவர் மணிவண்ணன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. அதேபோல ஆர்.எஸ்.ஆஷர் நிறுவனத்தின் பங்குதாரர் அதுல் ஆஷர், டாம்ஜி வேல்ஜி அண்ட் கோ நிறுவனத்தின் பங்குதாரர் அசோக் தாகா மற்றும் கோபால் புராடிய ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது." என்று துளசிதரன் கூறினார்.

x