போக்குவரத்து தொழிலாளர்களுடன் நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து ஜன.9ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் நோட்டீஸ் வழங்கி இருந்தன.
இந்த நிலையில் 2-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் மற்றும் இதர போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர். சுமார் 4 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது.
இதற்கிடையே, ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் அவர்களும் அனுமதிக்கப்பட்டனர். 2 மணிநேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது.
பின்னர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். சிஐடியு தலைவர் அ.சவுந்தரராஜன், "பொங்கலுக்கு முன் ஓய்வூதியர் பிரச்சினைக்காவது தீர்வுகாண வேண்டும் என்றபோதும் நியாயமான பதில் கிடைக்கவில்லை. எனவே, வரும் 9-ம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவது எனமுடிவு செய்துள்ளோம். அதிமுகவின் தொழிற்சங்கப் பேரவை தலைமையிலான கூட்டமைப்பு மற்றும் சிஐடியு உள்ளடங்கிய கூட்டமைப்பு இணைந்து வேலைநிறுத்தத்தை நடத்த இருக்கிறோம். தொமுச தொழிலாளர்கள் உட்பட அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள்" என்றார்.