புதுச்சேரி: புதுச்சேரி மாணவர்களுக்கு கேரளா, கர்நாடகாவில் முதுநிலை நீட் தேர்வு மையங்களை ஒதுக்கி இருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரவையில் திமுக குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக இன்று புதுவை சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் சிவா, “புதுச்சேரியில் எம்பிபிஎஸ் முடித்து முதுநிலை மருத்துவம் படிக்க இருக்கும் மருத்துவர்களுக்கு, நீட் தேர்வு எழுதுவதற்கு புதுச்சேரியை தவிர்த்து நீண்ட தொலைவு உள்ள கேரளா, பெங்களூரு, ஐதராபாத், கோவை உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளனர். இதற்காக பணம் விரயமாவதுடன் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
புதுச்சேரியில் பட்டமேற்படிப்பு நீட் தேர்வு எழுத வாய்ப்பும், வசதியும் உள்ளது. சுமார் 200 கி.மீ தொலைவுக்குள் மையம் ஒதுக்கலாம். இனி வரும் காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்பு ஆகியவற்றிற்கான நீட் தேர்வு மையங்களை புதுச்சேரியிலோ, அருகாமையில் உள்ள ஊர்களிலோ அமைக்க அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம்" என்றார்.
தொடர்ந்து பேசிய நாஜிம் (திமுக), "இதனால் புதுச்சேரி மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது. புதுச்சேரியில் மையம் ஒதுக்க நடவடிக்கை தேவை" என்றார். இதே கருத்தை வலியுறுத்திப் பேசிய ரமேஷ் பரம்பத் (காங்கிரஸ்). "மாஹே மாணவர்களுக்கு கேரளத்தில் தேர்வு மையம் ஒதுக்காமல் கர்நாடகத்தில் போட்டிருக்கிறார்கள்" என்றார்