மாமல்லபுரம் அருகே கடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் கட்டுமானப் பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு


மாமல்லபுரம்: பேரூர் பகுதியில் ரூ.4 ஆயிரத்து 276 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் கட்டுமானப் பணிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு, பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பேரூர் பகுதியில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.4 ஆயிரத்து 276 கோடியே 44 லட்சம் மதிப்பில், நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த ஆலையின் கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிலையில், ஆலையின் கட்டுமானப் பணிகளை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் முனைவர் தா.கார்த்திகேயேன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் சரவணன், மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ-வான பாலாஜி, சார் ஆட்சியர் நாராயண சர்மா மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ”பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான குடிநீர், பூண்டி, சோழவரம், புழல் ஏரி, கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் நீண்ட கால குடிநீர் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைத்து வருகிறது.

அதன்படி, நெம்மேலியில் ரூ.1,517 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று, கடந்த பிப்ரவரி மாதம் மேற்கண்ட ஆலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு முதல்வர் திறந்துவைத்தார். இதையடுத்து, அந்த நிலையத்தின் மூலம் 9 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னையின் வளர்ச்சிக்கேற்ப குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின், இந்த ஆலையின் கட்டுமானப் பணிகளை கடந்த ஆண்டு தொடங்கிவைத்தார். தற்போது, புதிய ஆலையின் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி, சுத்திகரிக்கப்பட்ட நீர்சேகரிப்பு தொட்டி, நீர்சேகரிப்பு தொட்டி, கசடுகளை கெட்டிப்படுத்தும் பிரிவு, நிர்வாக கட்டிடம் மற்றும் கடல் நீரை உட்கொள்ளும் கட்டமைப்பு, பண்டக சாலை, ஊடுருவி தொட்டி மற்றும் நடுநிலைப்படுத்தும் தொட்டிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலையில் கடல்நீரை குடிநீராக்க 1,150 மீட்டர் நீளத்துக்கு கடலுக்குள் (HDPE) குழாய்கள் பதிக்கப்படும். இது தவிர, இந்நிலையத்தில் அமைக்கப்படும் நீர் கரைந்த காற்று அலகுகள் (Dissolved Air Floatation) மற்றும் இரட்டை ஈர்ப்பு மணல் வடிகட்டி அலகுகள் (Dual Media Filter) மற்ற வழக்கமான நிலையங்களை விட நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அலகுகள் மூலம் கடலில் உள்ள கசடுகள் (மிதப்பவை, துகள்கள்) தற்போதுள்ள நிலையிலும், அதன் பிறகு கடல்நீரை குடிநீராக்கும் திறனை நிலையாகப் பெறும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

x