கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால் சேவை குறைபாடு உள்ளது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக கடலூர், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வு அறிக்கையினை கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட நிர்வாகிகள் பி.மல்லிகா, பி.மாதவி, வி.மேரி, பி.தேன்மொழி, ரேவதி, சாந்தகுமாரி உள்ளிட்டோர் இன்று ( ஆக.7) அளித்தனர்.
அந்த ஆய்வு அறிக்கையின் விவரம், 'கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், இதர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் போதுமான அளவிற்கு இல்லை. பற்றாக்குறை உள்ளதால் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆஷா பணியாளர்கள் இல்லை. பிரசவ வார்டில் கர்ப்பிணி பெண்களிடம் சுகப்பிரசவம் ஆவதற்கு ரூ.2000 மதிப்பிலான ஊசியை வெளியில் வாங்கி வரச் சொல்கிறார்கள். போதுமான படுக்கை வசதி இல்லாததால் பாய் கொடுத்து கர்ப்பிணிப் பெண்களை தரையில் படுக்கவைத்துள்ளனர். எக்ஸ்ரே எடுப்பதற்கு ரூ.50, சி.டி ஸ்கேனுக்கு ரூ.500, எம்ஆர்ஐ ஸ்கேனுக்கு ரூ.2500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரம் என்பது மருந்துக்குக்கூட இல்லை. மேல் சிகிச்சைக்காக வெளியில் செல்லும் போது ஆம்புலன்ஸூக்கு டீசல் போடுவதற்கு நோயாளிகளிடம் பணம் பெறுகின்றனர். குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. கடந்த காலங்களில் 9 மருத்துவர்கள் இருந்தனர். தற்போது 7 பேர் தான் பணியில் உள்ளனர். பராமரிப்பு ஊழியர்கள் 13 பேர் இருந்த நிலையில் தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் போதுமான ஊழியர்கள் இல்லை. சில நேரங்களில் ரத்தம், ஆக்சிஜன் கிடைப்பதில்லை. சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதியும் இல்லை. மருத்துவமனை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. தண்ணீர் வசதியும், கழிப்பிட வசதியும் இருந்தாலும் சுகாதாரமாக இல்லை. பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுவதில்லை. சுகாதார ஊழியர்கள் மூலம் பரிசோதனை முகாம் கிராமத்தில் நடத்தப்படுவதில்லை இந்த பிரச்சனைகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.