மத்திய அமைச்சர் ஷோபா செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்போம் - நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்


சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது. இதில் மொத்தம் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சூழலில், கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே, பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்தது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மத்திய இணையமைச்சர் ஷோபா மீது பெங்களூரு போலீஸார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்புக் கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக கூறினார்.

அப்போது, மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக மத்திய இணையமைச்சர் ஷோபா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு ஒரு கருத்து தெரிவித்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்புக் கோரினால் தான் சரியாக இருக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

x