திருச்சியில் மு.கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை திறப்பு:  முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார் 


திருச்சி காட்டூரில் இன்று முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ் அப்துல் சமது மற்றும் நிர்வாகிகள்.

திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட திமுக ஏற்பாட்டில் திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதியில் காட்டூர் ஆயில் மில் செக்போஸ்ட் அருகே முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது முழு உருவ வெண்கல சிலையை இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வழியே திறந்து வைத்தார்.

இந்த விழாவிற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), அப்துல் சமது (மணப்பாறை), திருச்சி மாநகர திமுக செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

x