பசுமை மின்உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப, நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்: திமுக எம்.பி. கனிமொழி சோமு வலியுறுத்தல்


சென்னை: பசுமை மின் உற்பத்திக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த தொழில்நுட்ப, நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி என்விஎன். சோமு வலியுறுத்தி உள்ளார்.

மாநிலங்களவையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் திமுக உறுப்பினர் கனிமொழி என்விஎன். சோமு பேசியதாவது: காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா மிக வலுவான இடத்தில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தியான 45,000 மெகாவாட்டில் நான்கில் ஒரு பகுதியான 11,000 மெகாவாட்டை குஜராத், தமிழகம் உற்பத்தி செய்கின்றன. எனவே, மத்திய அரசு அந்நிய முதலீடுகளை இத்துறைக்கு அதிக அளவில் கொண்டுவர வேண்டும்.

காற்றாலை, சூரியசக்தி, நீர் மின் உற்பத்தியில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜனவரியில் தமிழ்நாடு பசுமை மின்சார கழகம் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்பட்டு, தமிழ்நாடு எரிசக்தி முகமையும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய தமிழக மின் உற்பத்தியில் 22 சதவீதமாக உள்ள பசுமை மின்சார உற்பத்தியை 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்தும் இலக்குடன் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

சூரிய மின்சக்தியை பொருத்தவரை, 2023-24-ம் நிதி ஆண்டில் 11,000 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்து தமிழகம் சாதனை படைத்துள்ளது. எனவே, தமிழகம் போன்றமாநிலங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். சூரியசக்தி, காற்றாலை மின்உற்பத்தி பூங்காக்கள் அமைக்க மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களுக்கு மத்தியஅரசு அதிக நிதியுதவி தரவேண்டும்.

அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் சூரிய மின் உற்பத்தி வசதியை கட்டாயமாக்க சட்டம் கொண்டுவர வேண்டும். வீடுகளில்சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்கு விக்க தற்போது வழங்கப்படும் மானியத்தை உயர்த்த வேண்டும். குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஊக்குவிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.

பசுமை மின் உற்பத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து கடன் வழங்க ரிசர்வ் வங்கி மற்றும் இதரவங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பசுமை மின்சாரத்தை நாட்டின் பிற பகுதிகளுக்கு இழப்பின்றி எடுத்துச் செல்ல பிரத்யேக மின் வழித்தடம் ஏற்படுத்த வேண்டும்.

இந்த ஆண்டு மேலும் 15 முதல் 18 ஜிகாவாட் பசுமை மின்சார உற்பத்திக்கு இலக்கு வைத்துள்ள மத்தியஅரசு, இத்துறைக்கு ரூ.19 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியது போதுமானதல்ல. மாநில அரசுகளுடன் ஆலோசித்து, பசுமை மின் உற்பத்திக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த தொழில்நுட்ப, நிதி உதவிகளை மத்திய அரசு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

x