கவனம் பெறாத துறைகளில் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்: திட்டக்குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்


சென்னை: தமிழகத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி வளத்தை கண்டறிய வேண்டும். கவனம் பெறாத துறைகளில் புதிய திட்டங்களை உருவாக்கி தரவேண்டும் என மாநில திட்டக் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

மாநில திட்டக்குழுவின் 5-வது கூட்டம் அதன் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், திட்டக்குழுவின் செயல்பாடுகள் குறித்து அதன் துணை தலைவர்ஜெயரஞ்சன் எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திட்டக்குழு தயாரித்துள்ள ஆவணப் படத்தை முதல்வர் பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முதல்வரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் மட்டுமின்றி கல்வித் துறையில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி, ‘மக்களை தேடி மருத்துவம்’ மூலம் கிராம சுகாதாரத்தின் மேம்பாடு, நகர்ப்புற வேலைவாய்ப்பு அதிகரிப்பால் சமூகத்தின் வளர்ச்சி என பல தகவல்கள் கிடைத்தன.

காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகை உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளிர் உரிமை தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது. விடியல் பயணம் மூலம் பெண்களின் சமூக பங்களிப்பு உயர்ந்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரி செல்லும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி அரசின் ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் உயர்த்தி வருகிறது.

சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடிப்படையில் நிற்கும் இயக்கம் திமுக. மாநில வளர்ச்சியும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமின்றி, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

கல்வி, வேளாண்மை, உள்கட்டமைப்பு வசதியில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்துவிட்டது. அனைத்து துறைகளும் சமச்சீராக வளர்ந்து வருகின்றன.

பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, சமூக ரீதியாகவும் ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்ற நிலையை உருவாக்கும் வகையில்தான் கடந்த 3 ஆண்டுகளாக திட்டங்களை தீட்டினோம். இன்னும் பல புதிய திட்டங்கள் வர உள்ளன.

மாநில திட்டக் குழுவிடம் புதியசிந்தனைகள், திட்ட வடிவங்களை எதிர்பார்க்கிறேன். கவனம் பெறாததுறைகளில் புதிய திட்டங்களை உருவாக்கி தாருங்கள். அமலில்உள்ள திட்டங்களை மேம்படுத்தவும், இன்னும் பல திட்டங்களை உருவாக்கும் வகையில் நிதி வளத்துக்கும் ஆலோசனை கூறுங்கள். திட்டங்கள் தாமதமின்றி உடனடியாக அனைத்து மக்களையும் சென்று சேரும் வகையில், எளிதானசீர்திருத்தங்களை சொல்லுங்கள்.

அதேபோல, சமீபத்தில் நிதிஆயோக் வெளியிட்ட அறிக்கையை முன்மாதிரியாக கொண்டு ஆய்வறிக்கை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆட்சியின் நோக்கங்கள், சாதனைகளை கூறும்வகையில், பல்துறை அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் பங்கேற்பில் சென்னையில் மாபெரும் கருத்தரங்கு நடத்தி, ஆய்வு கட்டுரைகளை பெற்று வெளியிட வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலர் நா.முருகானந்தம், திட்டம் - வளர்ச்சி துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா, நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் பங்கேற்றனர்.

x