இந்தியா-ஜெர்மனி போர் பயிற்சி தொடக்கம்: பாதுகாப்பு பலப்படும் என விமானப்படை தலைமை தளபதி நம்பிக்கை


கோவை சூலூர் விமானப் படைத்தளத்தில் இந்தியா - ஜெர்மனி நாடுகளுக்கு இடையே எட்டு நாள் கூட்டுப் போர் பயிற்சி தொடங்கியது.

கோவை: கோவையில் இந்தியா-ஜெர்மனி நாடுகளின் கூட்டு போர் பயிற்சி நேற்று தொடங்கியது. இந்தப் பயிற்சி நாட்டின் பாதுகாப்புக்கு உதவும் என்று இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி கூறினார்.

இந்தியா-ஜெர்மனி நாடுகள் இடையே முதல்முறையாக கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் 8 நாட்களுக்கு கூட்டு போர் பயிற்சி நடைபெற உள்ளது. இதில், இந்தியா, ஜெர்மனி மட்டுமின்றி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்தவிமானப்படை வீரர், வீராங்கனைகள், அதிநவீன போர் விமானங்களுடன் பங்கேற்றுள்ளனர்.

இந்திய விமானப்படையின் தேஜஸ், சுகாய் உள்ளிட்ட அதிநவீனபோர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், பிற நாடுகளின் போர் விமானங்களுடன் இணைந்து போர்பயிற்சியில் ஈடுபட உள்ளன.

இதையொட்டி, போர் விமானத்தில் 5 மணி நேரம் பயணித்து, ஜெர்மனி நாட்டு விமானப் படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் நேற்று மாலை கோவைவந்தார். அவர் வந்த விமானம், இந்திய வான் எல்லையில் நுழைந்தது முதல் சூலூர் விமானப்படை தளம் வரும் வரை இருபுறமும்தேஜஸ் விமானங்கள் புடைசூழ வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய விமானப் படை தலைமை தளபதி சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த போர் பயிற்சி இந்தியாவின் விமானப்படை பலத்தை எடுத்துக்காட்டவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் மிகவும் உதவும். இரு நாட்டு விமானப்படையிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்து வருகின்றனர்’’ என்றார்.

ஜெர்மனி நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் கூறும்போது, ‘‘இந்திய விமானப்படையுடன் இணைந்து, 61 ஆண்டுகளுக்குப் பின்னர் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த பயிற்சி மிகவும் உதவும். இதுபோன்ற பயிற்சி, எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல’’ என்றார்.

இங்கிலாந்து விமானப்படை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சூலூர் விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கூட்டு போர் பயிற்சியில், நட்பு நாடு என்ற அடிப்படையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 130 வீரர்கள், 6 அதிநவீன போர் விமானங்கள் மற்றும் வானில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இரு விமானங்களுடன் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

இந்தோ-பசிபிக் பகுதியில்... இந்தப் பயிற்சி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், பாதுகாப்பை பலப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். நாடுகளிடையே உறவை மேம்படுத்தவும், புதிய சவால்களை திறம்பட எதிர்கொள்ளவும் உதவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x