மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்பது வருடங்களை கடந்திருக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு மத்தியில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவு செய்திருப்பது இதுதான் முதல் முறை. இந்தநிலையில், பாஜகவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி குறித்து பாஜகவில் மத்திய அமைச்சராகவும், பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த திருநாவுக்கரசர் எம்பி-யிடம் இது குறித்து பேசினோம்.
பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சி குறித்த உங்களது பார்வை என்ன?
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. உதாரணமாக, வெளிநாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த 2 லட்சம் கோடிக்கு அதிகமான கருப்புப் பணம் இருப்பதாகவும், அவற்றை மீட்டுக் கொண்டு வரப்போவதாகச் சொன்னார்கள். அந்த பணத்தை மீட்டு வந்தால் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடமுடியும் என்றெல்லாம் ஜம்பம் பேசினார்கள். இது எதுவும் நடக்கவில்லை.
வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்பதாகச் சொன்னார்கள். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், விவசாய உற்பத்தி இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்றெல்லாம் சொன்னார்கள் இவை எதுவுமே நடக்கவில்லை. மாறாக, 50 ஆண்டுகளாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட பொது சொத்துகள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை கொடுத்தால்கூட ஏற்கலாம். ஆனால், அரசாங்கத்துக்கு லாபத்தை அளித்துக் கொண்டிருக்கும் நவரத்தின தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை தனியாருக்குக் தாரைவார்க்கிறார்கள்.
இன்றைய நிலையில் இந்தியாவில் 12 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதாவது சுமாராக பதினாறு கோடி பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய எந்தத் திட்டத்தையும் இவர்கள் கொண்டுவரவில்லை. அவர்களுக்கு உதவித்தொகையாவது வழங்கியிருக்க வேண்டும். அதையும்கூட செய்யவில்லை.
இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது மத்திய அரசு முதலீடு செய்தோ அல்லது அவர்களின் முயற்சியாலோ புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கிறதா? அல்லது பல்லாயிரம் பேருக்கு வேலை தரக்கூடிய திட்டங்களை தொடங்கி இருக்கிறார்களா?
குறிப்பிட்ட சில பணக்காரர்கள் மட்டுமே இந்த ஆட்சியில் மேலும் மேலும் பணக்காரர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். ஏழைகளின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை. கியாஸ் விலை உயர்வு, பெட்ரோலிய விலை உயர்வு, மண்ணெண்ணெய் விலை உயர்வு என நடுத்தர மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
உயர் மதிப்பு பணம் ஆயிரம் ரூபாய், அதை எளிதாக பதுக்கி வைத்து விடுகிறார்கள் என்று சொல்லி அதனை மதிப்பிழப்பு செய்தார்கள். அப்படிச் சொல்லிவிட்டு அதைவிட அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததில் என்ன லாஜிக் இருக்கிறது? தற்போது அதையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துவிட்டார்கள். இதனால் ஒரு நிலையற்ற தன்மை மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.
ஒரு அரசாங்கத்தினுடைய வளர்ச்சி என்பது, கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்று மக்களுடன் இணைந்திருக்க வேண்டும். ஆனால், மின்னணு பரிவர்த்தனைகள் போன்று பலவற்றை செயல்படுத்தி அரசாங்கம் முன்னால் ஓடிக்கொண்டு மக்களை அந்த வேகத்துக்கு ஓடி வரச்சொல்கிறது. இது சரியான நடைமுறை இல்லை. மக்களுடைய இயல்பான வாழ்க்கை முறைக்கும், அரசின் திட்டமிடலுக்குமிடையே நிறைய இடைவெளி இருக்கிறது. இது மக்களுடன் ஒன்றிப் போகாத அரசாங்கமாக இருக்கிறது. இது மக்களுக்கான அரசாங்கமாக இல்லை.
மாநிலங்களில் தங்களுடைய ஆட்சி அல்லது தங்களுக்கு வேண்டிய ஒரு ஆட்சி என்றால் நிலைத்து நீடிக்க வைக்கிறார்கள். வேண்டாத ஆட்சி என்றால் எம்எல்ஏ-க்களை உடைத்து அந்த ஆட்சியை கவிழ்த்து இவர்களுடைய ஆட்சியை கொண்டு வருகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை, மக்களுக்கு எதிராக செயல்பட்டு ஜனநாயக விரோதமாக அகற்றும் வேலையை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இப்படி ஜனநாயக படுகொலையை பாஜக செய்திருக்கிறது.
சோழர்கால மாதிரி செங்கோல் தேவாரம் ஒலிக்க, ஆதீனங்கள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இந்திய ஜனநாயகத்தில் நாடாளுமன்றம் என்பது கோயில் போன்று புனிதமானது. அதை கோயிலாக மதிக்க வேண்டும். ஆனால், கோயிலாக மாற்றிவிடக்கூடாது. ஆனால், அதைத்தான் இன்றைய பாஜக அரசு செய்திருக்கிறது. அது புனிதமான இடம் என்பதற்காக அங்கு சாமி சிலைகளை கொண்டு வைத்து விட முடியாது. அதுவும் குறிப்பிட்ட ஒரு மதத்தின் தெய்வத்தை அங்கு வைக்க முடியுமா என்பதை எல்லாம் பாஜக உணர்ந்து பார்க்க வேண்டும். அரசியலை தனியாக நடத்த வேண்டும், மதத்தை தனியாக பார்க்க வேண்டும். அரசியலில் மதத்தை இணைக்கக்கூடாது. ஆனால், இவர்கள் அரசியலில் மதத்தை இணைத்து ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரையில் சவாரி செய்ய பார்க்கிறார்கள்.
நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் குடியரசு தலைவர் அழைக்கப்படாதது, எதிர்கட்சிகள் கலந்துகொள்ளாதது குறித்து..?
இந்திய ஜனநாயகத்திற்கு, இந்திய நாட்டிற்கு தலைவர் என்றால் அது குடியரசு தலைவர்தான். அவர்தான் நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்திருக்க வேண்டும். அவர் திறந்து வைப்பதனால் அவர் கட்டியது என்று ஆகிவிடாது. ராமர் கோயில் கட்டி திறக்கப்போகிறார்கள். அதற்கு மடாதிபதிகளில் யாரை வேண்டுமானாலும் கூப்பிடலாம். அதை யாரும் தவறு என்று சொல்லிவிட முடியாது. ஆனால், நாட்டின் முக்கிய அடையாளமான நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் முக்கியமான அரசியல் கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. குடியரசுத் தலைவரும் அழைக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளையும் ஜனாதிபதியையும் மதித்திருக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து ஒரு ஜனநாயக திருவிழாவாக அதை நடத்தியிருக்கலாம்.
நாடாளுமன்றம் என்பது மாநிலங்களவை, மக்களவை இரண்டும் இணைந்ததுதான். அப்படி இருக்கும்போது மாநிலங்களவையின் தலைவர் அழைக்கப்படாமல் மக்களவையின் தலைவரை மட்டுமே வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தை திறந்து வைப்பது என்ன மாதிரியான மரபு? மாநிலங்களவை தலைவராக இருப்பவர் குடியரசு துணைத் தலைவர். அவரை அழைத்தால் குடியரசு தலைவரையும் அழைக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு அவரையும் இந்த அரசாங்கம் புறக்கணித்திருக்கிறது.
அங்கு ஒலிக்கப்பட்ட தமிழ், சைவ மடாதிபதிகளுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை... இதையெல்லாம் எப்படி பார்க்கிறீர்கள்?
அங்கு மடாதிபதிகளுக்கு மரியாதை கொடுக்கப்பட்டதன் மூலமாகவும், தேவாரம் ஒலித்ததன் மூலமாகவும் தமிழுக்கு அவர்கள் எந்த சிறப்பையும் செய்துவிடவில்லை. அவர்களுடைய வளர்ச்சிக்கு, ஆதாயத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம் என்பதை சொல்லிக்கொண்டு தமிழகத்தில் கால் பதிக்க பார்க்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்தால் அது பயனைத்தருமே தவிர, மதத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதன் மூலம் ஆதாயம் அடைந்து விடமுடியாது.
பாஜகவின் சறுக்கல்களை காங்கிரஸ் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது என்கிறார்களே..?
கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் காங்கிரஸ் சரியாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. எல்லா நிலைகளிலும் ராகுல் காந்தி சரியாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல மாநிலங்களில் காங்கிரஸ் தன்னுடைய நிலையில் சரியாக இருந்து ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. அதனை பாஜக தவறான வழியில் மாற்றியிருக்கிறது என்பது வேறு.
பாஜகவின் எல்லா தவறுகளையும் ராகுல் காந்தி மக்கள் மன்றத்தில் பகிரங்கப்படுத்துவதால் தான் அவருடைய எம்பி பதவி பறிக்கப்பட்டது. அவருடைய அரசு இல்லம் காலி செய்யப்பட்டது. அவரை பழிவாங்கும் விதமாக பாஜக நடந்து கொள்கிறது. அதையும் அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அதனால் நாட்டு மக்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு மதிப்பு உயர்ந்திருக்கிறதே தவிர குறைந்து விடவில்லை.
மக்களை பிரித்தாலும் சூழ்ச்சி, வெறுப்பு அரசியல், மதவாத அரசியல், எதிர்ப்பவர்களை பழிவாங்குவது, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது, கட்சிகளை உடைத்து எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி அச்சுறுத்துவது இது எல்லாவற்றையும் மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள். இதை மக்களிடத்திலே எடுத்துச் செல்லும் முயற்சியில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது.
தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை பாஜக கைப்பாவையாக வைத்திருக்கிறது. நீதித்துறையிலும் பாஜகவின் தலையீடு இருக்கிறது என்றெல்லாம் சொல்லப்படுவது பற்றி..?
அது முழுக்க முழுக்க உண்மைதான். தங்களுக்கு வேண்டாதவர்களை அச்சுறுத்துவதற்காகவும் பழிவாங்குவதற்காகவும் சுய அதிகாரம் கொண்ட அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது. ஒரு அரசாங்கம் அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டுகிறபோது நேர்மையானவர்களும் அதற்கு வளைந்து கொடுக்க வேண்டியிருக்கிறது. அதிகார பலத்தால் பத்திரிகை உள்பட ஜனநாயகத்தின் பல தூண்களும் வளைக்கப்படுகிறது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி 2024 மக்களவைத் தேர்தலிலும் தொடருமா?
கண்டிப்பாக பிரதிபலிக்கும். ராகுல் காந்தியின் யாத்திரைக்குப் பிறகு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. ராகுல் காந்திக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் மோடிக்கு எதிரான ஒரு தலைவராக ராகுல் காந்தி அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார். அதனால் மக்களவைத் தேர்தல் காங்கிரஸுக்கே சாதகமான முடிவுகளைத்தரும்.
பாஜகவை எதிர்க்கக்கூடிய அத்தகைய வலுவோடு காங்கிரஸ் கட்சி இருக்கிறதா?
தேசிய அளவில் அத்தகைய வலுவான கட்சியாக காங்கிரஸ் தான் இருக்கிறது. மற்ற கட்சிகள் அனைத்தும் மாநில கட்சிகள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவு இடங்களை மட்டுமே அந்த கட்சிகள் பெறமுடியும். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாடு முழுக்க பரவலான இடங்களைப் பெற முடியும். அதனால் பாஜகவை எதிர்க்க சரியான, வலுவான கட்சி என்றால் அது காங்கிரஸ் தான்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் அதற்கு தயாரா? மக்களவைத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் வைத்திருக்கும் செயல்திட்டம் என்ன?
தேர்தலுக்கு முன்பாகவே அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்கான வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில மாநிலங்களில் ஓரணியில் திரள முடியாத கட்சிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தேர்தலுக்குப் பின்பு பாஜகவுக்கு எதிராக ஒன்றாக திரட்டுவதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து உத்திகளையும் கொண்ட செயல்திட்டத்தோடு காங்கிரஸ் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 25 இடங்களைப் பிடிப்போம் என்ற பாஜகவின் இலக்கு குறித்து?
25 என்ன... நாற்பதுமே இலக்காக வைத்து அவர்கள் செயல்படலாம். அதில் தவறொன்றும் இல்லை. கடந்த தேர்தலில் ஒரேயொரு இடத்தைக்கூட பிடிக்க முடியாத பாஜக இப்போது தகுதிக்கு மீறி இவ்வளவு ஆசைப்படுகிறது.
நீங்கள் இருந்த காலத்தைவிட இப்போது தமிழக பாஜக வளர்ந்திருப்பதாகச் சொல்லலாமா?
ஆட்சி பலம், அதிகார பலம் இருக்கிறது. அதைச்செய்து தருகிறேன், இதைத் தருகிறேன் என்று ஆசை காட்டுகிறார்கள், இப்படிச் செய்து விடுவேன், அப்படிச் செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். அதனால் கட்சி வளர்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அது, அவர்களுக்கு வெற்றியைத் தரக்கூடிய அளவுக்கோ ஆட்சியை பிடிக்கக்கூடிய அளவுக்கோ இல்லை.
திமுக மீது ஆட்சி மீது அனைத்து தரப்பிலும் வெறுப்பு இருப்பதாக சொல்லப்படுகிறதே?
அப்படி எல்லாம் எதுவுமில்லை. எதிர்க்கட்சிகள் சில விஷயங்களை பெரிதுபடுத்தி மக்கள் மத்தியில் வெறுப்பு இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. ஐந்து வருடம் நீடிக்க வேண்டிய ஒரு ஆட்சிக்கு இரண்டு வருடம்தான் ஆகியிருக்கிறது. ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். பல திட்டங்களை இனி நிறைவேற்றப் போகிறார்கள். அப்படி இருக்கும்போது வெறுப்பு இருக்கிறது என்று எதை வைத்துச் சொல்ல முடியும். இது எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம்.
உங்கள் பார்வையில் அதிமுக தற்போது எப்படி இருக்கிறது?
பல அணிகளாக பிரிந்து பலவீனமாக இருக்கிறது. அதேசமயம், கட்சி, சின்னம், தலைமை அலுவலகம் ஆகியவை யாரிடம் இருக்கிறதோ அவர்கள் தான் உண்மையான அதிமுகவாக இருக்க முடியும். தனியாக ஒரு சின்னத்தை ஒரு உருவாக்கி அதை இரட்டை இலைக்கு இணையான சின்னமாக கொண்டுவந்து விடுமளவுக்கு அப்படிப்பட்ட தலைவர்கள் யாரும் இப்போது இல்லை.
எம்ஜிஆர் காலத்து அதிமுகவிலும், ஜெ – ஜா பிரிவின்போதும் கட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகித்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்படிப்பட்டவர் அதிமுகவுக்கு என்ன ஆலோசனை சொல்ல விரும்புகிறீர்கள்?
அடுத்த கட்சிக்கு அறிவுரை கூறும் நிலையில் நான் இல்லை. அந்த கட்சியில் இருக்கும்போது என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தேன். இப்போது காங்கிரஸ் கட்சிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துகொண்டிருக்கிறேன்.