பஹ்ரைன் கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் உடலை கொண்டுவரக் கோரி குடும்பத்தினர் மனு @ ராமநாதபுரம்


மீனவர் மருதமலை உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள்.

ராமநாதபுரம்: பஹ்ரைன் கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரக் கோரி அவரது குடும்பத்தினர் ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் தாலுகா மோர்ப்பண்ணை கிராமத்தை சேர்ந்த மீனவர் மருதமலை (37). இவர் பஹ்ரைன் நாட்டில் மீன்பிடி ஒப்பந்த கூலியாக வேலை செய்தபோது கடந்த 5-ம் தேதி கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும், குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி தலைமையில் மீனவரின் மனைவி விஜயசாந்தி, 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் கண்ணீர் மல்கவும் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் இன்று மாலை ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து மனு அளித்தனர். ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து மீனவர் மருதமலையின் மனைவி விஜயசாந்தி கூறியதாவது: “எனது கணவரின் வருமானத்தை வைத்தே இரண்டு பெண் குழந்தைகளை படிக்க வைத்தேன். எனது மாமியார் கண்ணாத்தாள்(62) என்பவரையும் பராமரித்து வருகிறேன். இந்நிலையில் எனது கணவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. எனவே அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

உயிரிழந்த மீனவர் மருதமலை

மோர்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த துரைபாலன் கூறும்போது, “கடந்த 5-ம் தேதி இரவு மருதமலை மற்றும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 3 மீனவர்கள் பைபர் படகில் பஹ்ரைன் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதிக்கு வந்த சவுதி அரேபியா நாட்டு கடற்படை தங்கள் கடல் பகுதிக்குள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பில் ஈடுபடுவதாக கருதி அவர்களை கைது செய்யும் நோக்கில் விரட்டிச் சென்றுள்ளது.

இதனால் பதற்றமடைந்த மீனவர்கள் தங்கள் படகை எடுத்து கொண்டு கரை திரும்பிச் சென்ற பொழுது, சவூதி கடற்படை நமது மீனவர்களின் பைபர் படகில் மோதி படகை மூழ்கடித்துள்ளது. இதில் மீனவர் மருதமலை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மீனவர் அன்பரசனையும் அந்நாட்டு கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் மருதமலை உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். எனவே அன்பரசனையும் மீட்க வேண்டும்.

மருதமலையின் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த அவரது குடும்பம் தற்போது நிராதரவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் உயிரிழந்த மீனவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

x