மதுரை: ‘‘எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய அரசு தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது’’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கள்ளந்திரியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் புதிய கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் செல்வ விநாயகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ. வெங்கடேசன்(சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை, மாவட்ட சுகாதார அலுவலர் பா.குமரகுருபரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் கட்டிட பணிகள் இன்னும் தொடக்கப்படாமல் இருப்பது குறித்து மத்திய அரசு, தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது.
விரைவில் கட்டுவோம் என அவர்கள் உறுதியளித்து இருக்கிறார்கள். முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் நானும், சுகாதாரத்துறை செயலரும் மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை சந்தித்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை கட்டுவதற்கு வலியுறுத்த உள்ளோம். இதுவரை 17 முறை சந்தித்துள்ளோம்.
ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடமும் வலியுறுத்தி மதுரையில் பணியை தொடங்கி வலியுறுத்தி உள்ளோம். அவர்களும், மத்திய அரசின் பணி முன்னேற்றங்களை அடுத்தடுத்து காட்டினால் நிதி ஒதுக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். நாட்டின் பிற ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்குகிறது. ஆனால், தமிழகத்திற்கு மட்டும் பன்னாட்டு நிறுவனத்திடம் நிதி கேட்பதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு உட்பட்டதாகவே உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.