சிறுவாணி அணை விவகாரம்: அமைச்சர் கே.என்.நேரு புதிய விளக்கம்


சிறுவாணி அணை | கோப்புப் படம்

கோவை: “சிறுவாணி அணையில் நீர்த்தேக்க அளவை அதிகரிக்க வேண்டும் என முன்னரே கேரள அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஆக.6) செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். அவர் பணி சிறப்பாக செய்வதற்கு நாங்களும் அவருக்கு உற்ற துணையாக இருப்போம். கோவை மாநகருக்கு நிறைய பணிகளை செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகரில் முதல்வரின் உத்தரவின் பேரில் ரூ.300 கோடிக்கு மேல் சாலைகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாநகருக்கு அடிப்படைத் தேவைகளை செய்வதற்கு முதல்வர் எங்களுக்கு நிறைய உத்தரவு தந்துள்ளார். நிச்சயம் அதை நிறைவேற்றுவோம். தற்போது கவுன்சிலர்களும் தங்களது கோரிக்கையை தெரிவித்துள்ளனர். சிறுவாணி அணையில் நீர்த்தேக்க அளவை அதிகரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் முன்னரே கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக நீர்வளத்துறை கேரள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மேயர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. தங்கள் வார்டுகளில் உள்ள கோரிக்கைகளை கவுன்சிலர்கள் தெரிவித்தனர். 2 வருட பதவி காலத்தில் ஊழல் நடந்ததாக அதிமுகவினர் தெரிவிப்பதாக செய்தியாளர்கள் கேட்கின்றீர்கள். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

x