கருணாநிதியின் 6-வது நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை அமைதிப் பேரணி


கோப்புப் படம்

சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 6-வது நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஆக.7) காலை அமைதிப்பேரணி நடைபெறுகிறது.

தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரும், திமுகவின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவருமான மு.கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆக.7-ம் தேதி மறைந்தார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட அண்ணா நினைவிட வளாகத்தில், தற்போது நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சார்பில் ஆண்டுதோறும், அண்ணாசாலை, வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு அண்ணா சாலையில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில், கருணாநிதிக்கு சிலை திறக்கப்பட்டது. அந்தாண்டு முதல், கருணாநிதி சிலையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் புறப்பட்டு, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தாண்டும், நாளை காலை 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் புறப்பட்டு, கருணாநிதி நினைவிடத்தில் முடிகிறது. நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதுதவிர, முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் கோபாலபுரம் மற்றும் சிஐடிநகர் இல்லங்கள், அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகத்துக்கும் செல்ல உள்ளார்.

x