‘மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் 1,869 விதிமீறல் கட்டிடங்கள் கண்டுபிடிப்பு’


கோப்புப் படம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் 1,869 விதிமீறல் கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் 9 மீட்டர் உயரம், ஒரு கி.மீட்டருக்கு அப்பால் 12 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடங்கள் கட்டக் கூடாது என தமிழக அரசு கடந்த 1996, 1997 ஆகிய ஆண்டுகளில் அரசாணை பிறப்பித்தது. ஆனால், இந்த அரசாணைகளை மீறி பலர் உயரக்கட்டுப்பாட்டை காட்டிலும் அதிக உயரத்துக்கு கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.

இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோதமாக அனுமதியும் வழங்கியுள்ளனர். இந்த கட்டிடங்களில் தரைத்தளத்துக்கு கீழும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பல நூறு அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறுகளை அமைத்துள்ளனர். கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் மீனாட்சி அம்மன் கோயில் சுவர்கள், கோபுரங்களில் விரிசல் விழுந்துள்ளது. எனவே, மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி உயரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி வழக்கறிஞர் வாதிடுகையில், "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி விதிமீறி கட்டியதாக 1,869 கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது" என்றார். இதையடுத்து நீதிபதிகள், "அந்தக் கட்டிடங்கள் எவ்வளவு ஆண்டுகள் பழமையானவை? முறையான கட்டிட வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா?" எனக் கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள்,"விதிமீறல் கட்டிட உரிமையாளர்கள் வரைப்பட அனுமதியை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை சரிபார்த்து விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

x