பனிமயமாதா ஆலய திருவிழா: தற்காலிக கடைகளை 15 நாட்களுக்குள் அகற்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவு


கோப்புப் படம்

மதுரை: தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள் மற்றும் ஃபிளெக்ஸ் பேனர்களை 15 நாளில் அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஃபிடெலிஸ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "தூத்துக்குடி பனிமய மாதா ஆலய 442வது ஆண்டு திருவிழா ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற்றது. இதையொட்டி தேவாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஃபிளெக்ஸ் பேனர்கள் கட்டப்பட்டன. இதனால் தேவாலயத்தை சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வீடுகளுக்கு சுதந்திரமாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

திருவிழா முடிந்த பிறகும் தற்காலிக கடைகள், ஃபிளெக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே, தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள் மற்றும் ஃபிளெக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் மனுவில் கோரி இருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், "தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருவிழா முடிந்த நிலையில் அகற்றப்படாமல் இருக்கும் ஃபிளெக்ஸ் போர்டுகள் மற்றும் தற்காலிக கடைகளை 15 நாட்களில் அகற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

x