இலங்கை கடற்படை கைது செய்த 22 மீனவர்களை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தருவைகுளம் மீனவர்கள். |படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர்கள் 22 பேரையும், அவர்களது படகுகளையும் மீட்கக் கோரி மீனவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் இது தொடர்பாக மக்களவையில் கனிமொழியும் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்த அந்தோணி மகாராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்கள் ஜூலை 20-ம் தேதியும், அந்தோனி தேன் டெனிலா என்பருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் ஜூலை 23-ம் தேதியும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்த இரு படகுகளும் திங்கட்கிழமை மாலை சர்வதேச கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, காற்றின் வேகம் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 2 படகுகளையும் சிறைபிடித்து, அவற்றில் இருந்த 22 மீனவர்களையும் கைது செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தருவைகுளத்தில் உள்ள உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில், தருவைகுளம் புனித நீக்குலாசியார் பருவலை விசைப்படகு சங்க தலைவர் அந்தோணி சர்ச்சில், தருவைகுளம் தூய மிக்கேல் ஆழ்கடல் செவுள்வலை தொழில்புரிவோர் முன்னேற்ற சங்க தலைவர் பன்னீர்தாஸ் மற்றும் ஊர் நிர்வாகிகள் மகாராஜா, ஏ.யோகராஜ், எம்.யோகராஜ், சந்திரபோஸ் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள், மீனவர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், “நாங்கள் தருவைகுளம் கிராமத்தில் விசைப்படகில் பருவலை மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். அரசின் ஒத்துழைப்போடும், கடல் மீன்பிடித் தொழிலில் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல், மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம்.
எங்கள் ஊரைச் சேர்ந்த அந்தோணி தேன் டெனிலா என்பவருக்கு சொந்தமான பருவலை விசைப்படகானது கடந்த 23.07.2024 அன்றும், அந்தோணி மகாராஜா என்பவருக்கு சொந்தமான பருவலை விசைப்படகானது கடந்த 20.07.2024 அன்றும் தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றன.

இந்த இரு படகுகளையும், அதில் இருந்த 22 மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் 05.08.2024 அன்று கைது செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து தாங்கள் தலையிட்டு எங்கள் பருவலை விசைப்படகுகளையும், 22 மீனவர்களையும் விடுவித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனக் கோரப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணனையும் அவர்கள் சந்தித்து மனு அளித்தனர். மேலும், தூத்துக்குடி எம்பி-யான கனிமொழி, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கும் தருவைகுளம் மீனவர்கள் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

கனிமொழி எம்பி பேச்சு: தருவைகுளம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவரம் அறிந்த தூத்துக்குடி எம்.பி-யான கனிமொழி செவ்வாய்கிழமை மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக பேசினார். அப்போது அவர், “இலங்கை கடற்படையினர் இந்த ஆண்டு மட்டுமே தமிழக மீனவர்களின் 27 படகுகளை சிறைபிடித்துள்ளனர். சுமார் 177 இந்தியப் படகுகள் இப்போது இலங்கை அரசின் கைவசம் இருக்கின்றன.

அந்த படகுகள் அங்கு தேசியமயமாக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் படகுகள் அவர்களுடையதாக உரிமை கொண்டாடப்படுகின்றன. அந்தப் படகுகள் இந்திய மீனவர்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகும் கூட, படகுகள் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தூத்துக்குடி தருவைகுளத்தில் இரண்டு படகுகளில் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த அரசுக்கு இது தொடர்பாக கவனத்தை எழுப்பிய பிறகும், இது நடந்திருக்கிறது. எனவே, இப்பிரச்சினையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

x