தஞ்சாவூர்: கல்லணை அருகே கடையக்குடியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாததால் அங்குள்ள பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விவசாயமும் பொய்த்துள்ளதால் உடனடியாக நீர்நிலைக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி இன்று ஏரிக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையக்குடி அய்யனார் குருக்கள் ஏரிக்குள் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் வெ.ஜீவக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த இரு ஆண்டுகளாக புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் வராததால், 134 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடையக்குடி அய்யனார் குருக்கள் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் நேரடியாக 500 ஏக்கரிலும், இதன் தொடர்ச்சியாக 2,500 ஏக்கரிலும் பாசனம் செய்யமுடியாமல் போனது.
அதேபோல் நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாததால் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் கூடுதலாக தண்ணீரை திறந்து, இந்த ஏரியில் நீர் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ஜோசப் எடிசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பூதலூர் ஒன்றியச் செயலாளர் உதயகுமார், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் மெய்யழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் நம்மிடம், “கல்லணையிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் கடையக்குடி உள்ளது. இந்த ஊரில் சுமார் 1,500 பேர் வசித்து வருகிறோம். முழுவதும் விவசாயம் சார்ந்த ஊர். இங்குள்ள அய்யனார் குருக்கள் ஏரி மூலம் சாகுபடி செய்து வருகிறோம். இந்த ஏரிக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து தண்ணீர் வரும். ஆனால் கடந்தாண்டு தண்ணீர் வராததால் ஏரி வறண்டது. விவசாயமும் செய்ய முடியவில்லை.
இதனால் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அருகில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தலூரிலிருந்து குடிநீர் குழாய் மூலம் கடையக்குடிக்கு தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்யப்படுகிறது. அது எங்களுக்கு போதுமானதாக இல்லை.
தற்போது காவிரி நீர் கொள்ளிடம் ஆற்றில் உபரியாக திறக்கப்பட்டுள்ள தண்ணீரானது கடலில் வீணாக கலக்கிறது. அதேசமயம் எங்கள் ஊருக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் வரவில்லை. இந்த ஆண்டாவது நாங்கள் விவசாயம் செய்யவும், குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவும் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்” என்றனர்.