திருவள்ளூர்: வேப்பம்பட்டு ரயில்வே கடவுப் பாதை பகுதியில் பாதசாரிகளுக்கான வழி அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே வேப்பம்பட்டு பகுதியில் ரயில்வே கடவுப் பாதை 13 அமைந்துள்ளது. இப்பாதையை வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரயில்கள் செல்லும் போது, கடவுப் பாதை மூடப்படும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் காத்திருக்காமல், கடவுப் பாதையை ஒட்டியுள்ள பாதசாரிகளுக்கான வழியில் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.
இதனால், இந்த கடவுப் பாதை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்காக ரயில்வே நிர்வாகம் கடந்த 3ம் தேதி, வேப்பம்பட்டு ரயில்வே கடவுப் பாதை 13 பகுதியில் உள்ள பாதசாரிகளுக்கான வழியை அடைத்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு பகுதிகளைச் சேர்ந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் 50 பேர், புறநகர் மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாள பகுதிகளில் நின்று, மின்சார ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த செவ்வாய்ப்பேட்டை போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார்,போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, சுமார் அரை மணி நேரம் நீடித்த போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.