குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர்மன்றத் தலைவர் தேர்தலில் சுசீலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர்மன்றத் தலைவராக ஷீலா கேத்தரின் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் கடந்த சில மாதங்களாக நகராட்சித் தலைவர் பதவி காலியாக இருந்தது. துணைத் தலைவர் வாசிம் ராஜா தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குன்னூர் நகராட்சியின் 16-வது வார்டு திமுக கவுன்சிலரான சுசிலாவை தலைவராக தேர்வு செய்ய மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக்குக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி இருந்தார்.
இதன் பேரில் இன்று ஆணையாளர் சசிகலா முன்னிலையில் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் திமுக என்பதால் அனைவரும் சுசிலாவை ஏக மனதாக போட்டியின்றி தேர்வு செய்தனர். தொடர்ந்து அவர் நகர்மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அவருக்கு திமுக கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள், குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
திமுக நகரச் செயலாளரும் கவுன்சிலருமான ராமசாமி, நகர்மன்றத் துணைத் தலைவர் வாசிம் ராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து சுசிலாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். பின்பு வெற்றிபெற்ற சுசிலா மாவட்டச் செயலாளர் முபாரக்கை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.