தென்காசி: அரசுப் பள்ளிக்கு திடீர் ஆய்வு செய்ய வந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கவனித்து அறிவுரைகளை வழங்கினார்.
தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2019ம் ஆண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட மைய நூலக கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென்காசிக்கு வந்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று மாவட்ட மைய நூலக கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எவ்வித முன்னறிவிப்புமின்றி அமைச்சர் திடீர் ஆய்வில் ஈடுபட்டது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட மைய நூலக கட்டிட பணிகளை ஆய்வு செய்த பின்னர், இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆய்வு செய்த அமைச்சர், கல்வித்துறை அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும், இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழமையான கட்டிடங்களை ஆய்வு செய்து, அவற்றை பராமரிப்பது குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் நடத்துமாறும், மாணவர்களை தேர்வுக்கு நல்ல முறையில் தயார்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, “மேல்நிலைக் கல்வி உங்கள் வாழ்க்கையில் முக்கியமானது. அனைவரும் நன்றாகப் படியுங்கள். அர்ப்பணிப்புடன் படிக்க வேண்டும். உங்களை பெற்றோர் கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர். நன்கு படித்து, நல்ல கல்லூரியில் படித்தால் வாழ்க்கை சிறப்படையும். இப்போதே கல்லூரிகள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
இதைத்தொடர்ந்து வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் அரசுப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ், பின்னர் அங்கிருந்து விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றார்.