புதுச்சேரி: தகுதியில்லாதவர்களுக்கு சிவப்பு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறி சட்டப்பேரவையில் அமைச்சருடன், எம்எல்ஏ-க்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது சுயேச்சை எம்எல்ஏ-வான பி.ஆர்.சிவா பேசும்போது, “குடிமைப்பொருள் வழங்கல் துறையில் தகுதியில்லாதவர்களுக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. உண்மையான ஏழை, எளிய மக்கள், கஷ்டப்படும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது” என்றார்
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார், “உறுப்பினர் பி.ஆர்.சிவா அப்படி எத்தனை ரேஷன் கார்டுகள் வாங்கியுள்ளார்கள் என்பதைச் சொல்லச் சொல்லுங்கள்” என்றார்.
தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு: பிரகாஷ்குமார் (சுயேட்சை): “அமைச்சர் பதற்றமடைய வேண்டாம். என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்” என்றார்.
நாஜிம் (திமுக): "தனி நபர் வருமானம் ரூ.2 லட்சத்து 63 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆனால், மொத்தம் 3 லட்சத்து 53 ஆயிரத்து 750 ரேஷன் கார்டுகள். 1 லட்சத்து 86 ஆயிரம் 400 சிவப்பு ரேஷன் கார்டுகள், மஞ்சள் கார்டுகள் 1 லட்சத்து 67 ஆயிரத்து 350. இதன்படி பார்த்தால் தனிநபர் வருமானம் உயர்த்துள்ளது என்று மகிழ்ச்சி அடைவதா, இல்லை மாநிலம் பின்னோக்கிச் செல்கிறது என்று குறை கூறுவதா என்று தெரியவில்லை.” என்றார்.
அமைச்சர் சாய் சவரணக்குமார்: "இப்போது குற்றம்சாட்டும் பி.ஆர்.சிவா தனது தொகுதிக்கு முதல்வரிடம் கூறி 600 சிவப்பு ரேஷன் கார்டுகளை தனிப்பட்ட முறையில் வாங்கிச்சென்றுள்ளார். இதனை அவர் விளக்க முடியுமா? அவர்கள் எல்லோரும் தகுதியானவர்களா? ரேஷன் அட்டை வழங்கும் பணியில் இரவு பகல் பாராமல் மக்களுக்கு ரேஷன் கார்டுகளை விநியோகித்த அதிகாரிகளை கொச்சைப்படுத்த வேண்டாம்.” என்றார்.
பி.ஆர்.சிவா: ”அதிகாரிகளை வைத்து வேலை செய்யவில்லை. சிவப்பு நிற ரேஷன் கார்டு கொடுப்பதற்கு என்றே தனியாக அமைச்சர் ஆட்களை வைத்து வேலை செய்தார். இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. விசாரணை வைக்க வேண்டும்.” என்றார்.
பிரகாஷ்குமார் : ”எல்லா எம்எல்ஏக்களுக்கும் இதே ஆதங்கம் உள்ளது. தகுதி இல்லாதவர்களுக்கு சிவப்பு நிற அட்டை தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து எல்லா எம்எல்ஏ-க்களும் பேசுவோம். அமைச்சர். ஏன் பதறுகிறார். கத்திக் கத்திப் பேசுவதால் எல்லாம் உண்மையாகி விடாது.” என்றார்.
வைத்தியநாதன்: ”எனது தொகுதியில் 500 சிவப்பு நிற அட்டை வாங்கி கொடுத்துள்ளேன். தகுதியானவர்களுக்கு மட்டும் தான் நான் வாங்கிக் கொடுத்துள்ளேன். ஆனால் அதையும் மீறி எனது தொகுதியிலேயே எனக்கே தெரியாமல் பலருக்கு சிவப்பு நிற அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.” என்றார்.
அமைச்சர் சாய் சரவணன்குமார்: ”இப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் அப்போதே ஏன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை? முறைகேடு நடந்திருந்தால் என்னிடம் புகார் அளித்திருக்க வேண்டியதுதானே. இதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. தகுதியானவர்களுக்கு மட்டுமே சிவப்பு நிற ரேஷன் கார்டு வழங்கப்பட்டிருக்கிறது. பணம் பெற்றுக்கொண்டு ரேஷன் அட்டை வழங்கியதாக காழ்ப்புணர்ச்சியில் கூறுகின்றனர்” என்றார்
அமைச்சர் பேசியதைத் தொடர்ந்து அனைத்து எம்எல்ஏ-க்களும் ஒரு சேர இப்பிரச்சினையை கிளப்பியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், “இது தொடர்பாக உரிய ஆய்வு செய்து, முதல்வர் உரிய பதில் அளிப்பார்” என்றார்.
அங்காளன் (சுயேட்சை): ”சிவப்பு நிற அட்டை பெற தொகுதி தோறும், புரோக்கர்கள் இருந்தனர். அவர்கள் ரூ.15 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு அட்டை வழங்கியுள்ளனர். இதனை யாரும் மறுக்க முடியாது. வேண்டுமானால் சிபிஐ விசாரணைக்கு அமைச்சர் தயாரா? இது தொடர்பாக சிபிஐ விசாரணை வைக்க வேண்டும்.” என்றார்.
நாஜிம்: ”சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்தி தகுதியில்லாத கார்டுகளை நீக்க வேண்டும். இதுதான் இதற்கு தீர்வு. சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்: சிவப்பு நிற ரேஷன் கார்டு தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருதுகிறார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்.” என்றார்.
நாக.தியாகராஜன் (திமுக): “இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க வேண்டும்." என்றார்.