குளத்தில் தண்ணீர் குடித்த 6 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை: புதுக்கோட்டையில் அதிர்ச்சி


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குளத்துத் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தியதால் பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அன்னவாசல் அருகே பரம்பூர் ஊராட்சி மேட்டுப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினருக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் குடிநீர் விநியோகித்தாலும் அங்குள்ள ஊருணியிலிருந்து தண்ணீரை எடுத்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு குளத்துத் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தியதில் பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த ஆட்சியர் எம்.அருணா பல்வேறு துறை அலுவலர்களுடன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம் கணேஷ் தலைமையில் மருத்துவ பரிசோதனை முகாமும் அங்கு நடைபெற்றது. அதில், 6 பேருக்கும் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட 6 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், குடிநீர் மாதிரியைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, "மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வரும் குடிநீரில் உப்பு அதிகமாக இருப்பதால் அதை குடிநீராகப் பயன்படுத்த முடியவில்லை. ஆகையால், இந்த ஊருணியில் இருந்து தண்ணீரை எடுத்து குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தி வருகிறோம்" என்று கிராம மக்கள் கூறினர். இதேபோல, அன்னவாசல் அருகே வயலோகம் கிராமத்தில் கடந்த மாதம், அசுத்தமான குடிநீரை குடித்ததில் 15 மாணவர்கள் மஞ்சள் காமாலையில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x