எஸ்.ஐ அவமானப்படுத்தியதால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை: தாய்க்கு ரூ.10.70 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு


சென்னை: காவல் உதவி ஆய்வாளர் அவமானப்படுத்தியதால் காவல் நிலையம் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் தாய்க்கு, ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குகையநல்லூர் காலனியைச் சேர்ந்தவர் சரத். இவரது சகோதரர், மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். இதன் காரணமாக, சரத்தை மேல்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி, பொது இடத்தில் அவமானப்படுத்தியுள்ளார். இதைத் தாங்க முடியாத சரத், மேல்பாடி காவல் நிலையம் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து உதவி ஆய்வாளருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் இந்த வழக்கு கைவிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டதால், வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி முழு இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சரத்தின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி இளந்திரையன், உயிரிழந்த சரத்தின் தாய், ரூ.12 லட்சம் இழப்பீடு மற்றும் கருணைத் தொகையை பெற உரிமை உள்ளது. எனவே, ஏற்கெனவே வழங்கப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் போக மீதமுள்ள ரூ.10 லட்சத்து 70 ஆயிரத்தை தமிழக அரசு 4 வாரங்களில் சரத்தின் தாய்க்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

x