“யாரை திருப்திப்படுத்த இத்தனை விவசாயி சங்கங்கள்?” - தங்கர் பச்சான் ஆவேசம்


போராட்டம்

சென்னை: பனை, தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி, சென்னையில் இன்று விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் தங்கர் பச்சான்,“விவசாய சங்க அமைப்புகள் சரியில்லை. இதனால் தான் நம்மை ஆட்டு மந்தைகள் போல நடத்துகின்றனர். விவசாயிகள் சங்கத்துக்கு எதற்கு அரசியல் கட்சி? யாரை திருப்திபடுத்த இந்த சங்கங்கள்?” என்று ஆவேசப்பட்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பனை, தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்குஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்துள்ளார். திரைப்பட இயக்குநர்கள் தங்கர் பச்சான், கவுதமன், தமிழ் மையம் நிறுவனர் ஜெகத்கஸ்பர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பனை, தென்னை விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரதம் குறித்து பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், " சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி பனை, தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்திட அனுமதி வழங்க வேண்டும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், கள் கேரளாவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய தடை விதிக்கக் கூடாது.

கள்ளச்சாராய விற்பனை செய்யும் சமூக விரோதிகளோடு கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் இணைத்து அவமானப்படுத்தி வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும். புற்றுநோயை உருவாக்கும் பாமாயில் விற்பனையை தடை செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலெண்ணெய் விற்பனையை பொது விநியோகத் திட்டத்தில் அனுமதிக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து இயக்குநர் தங்கர் பச்சான் பேசுகையில், "தகுதி இருந்தால் தான் ஆள வேண்டும். மறைந்த தலைவர்கள் அண்ணா, பெரியார் இப்போது இருந்திருந்தால் விவசாயிகள் இவ்வளவு துயரத்திற்கு தள்ளப்பட்டிருப்போமா? இங்கு நடைபெறும் போராட்டம் குறித்து அமைச்சருக்கோ, முதல்வருக்கோ தெரியுமா? விவசாயிகள் பற்றி கவலைப்படாத ஆட்சி என்ன நல்ல ஆட்சி? 5 தென்னை மரம் இருந்தால் ஒரு வீட்டை அவை காப்பாற்றும். ரூ.1,000 எல்லாம் எங்களுக்கு தேவையில்லை. நடிகர்கள் பேசினால் முக்கியத்துவம் கிடைக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை.

விவசாய சங்க அமைப்புகள் சரியில்லை. இதனால் தான் நம்மை ஆட்டு மந்தைகள் போல நடத்துகின்றனர். விவசாயிகள் சங்கத்துக்கு எதற்கு அரசியல் கட்சி? யாரை திருப்திபடுத்த இந்த சங்கங்கள்? தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சங்கத்தை ஒருங்கிணைத்து ஒரே சங்கமாக செயல்பட வேண்டும். தேர்தலை புறக்கணிக்க வேண்டும். ஒரே அணியில் இருக்க வேண்டும்.

கமிஷன் மூலம் கொள்ளையடிப்பதற்கு தான் பாமாயில் கொள்முதல் செய்யப்படுகிறது. பாமாயில் என்பது விஷம். விவசாய உற்பத்தி பொருட்களுக்கான சரியான விலையை எந்த அரசும் தந்தில்லை. அரசும், வியாபாரிகளும் சேர்ந்து விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். இது மிகவும் வருத்தமளிக்கிறது" என்றார்.

x