வேலைநிறுத்தம் எதிரொலி: ஜிப்மரில் உள்நோயாளிகளுக்கு டயட் உணவுமுறை நிறுத்தப்பட்ட அவலம்!


ஜிப்மர் மருத்துவமனையில் பணியாளர்கள் பணிமாற்றத்தால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதன் எதிரொலியாக, மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு அவரவர் வியாதிகளுக்கு ஏற்றவாறு வழங்கப்பட்டு வந்த டயட் உணவு முறை நிறுத்தப்பட்டு மூன்று வேளையும் தயிர்சாதம் தரப்படுவதால் நோயாளிகள் கடும் பாதிப்பில் உள்ளனர்.

புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. இங்கு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை தரப்படுவதால் புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவரவர் நிலையைப் பொறுத்து நோயாளிகள் சிகிச்சைப் பெறுவர்.

சிகிச்சைக்காக வருவோர் வெளிப்புற சிகிச்சை முடிந்து திரும்புவர். பாதிப்பில் உள்ளோர் உள்புற நோயாளிகளாக அனுமதிக்கப்படுவர். உயர் சிகிச்சையில் இருக்கும் உள்நோயாளிகளாக சுமார் 800 பேர் பல்வேறு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்நோயாளிகளின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவரவர் உடல்நிலையை மேம்படுத்தும் நோக்கில் டயட் உணவு வகைகள் ஜிப்மர் மருத்துவமானியில் விநியோகிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ஜிப்மரின் உள்நோயாளிகள் அனைவருக்கும் 3 வேளையும் தயிர்சாதம் தரப்படுகிறது. இதுபற்றி விசாரித்தபோது, டயட் உணவு வகைகளைத் தயாரித்து தரும் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. பலர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். அதனால் நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப டயட் உணவு தரப்படாமல், மூன்று வேளையும் தயிர்சாதம் தரப்படுகிறது. இதனால் நோயாளிகளின் நோய் பாதிப்பு கடுமையாக அதிகரிக்கும்." என்றனர்.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக பிரச்சினையை எழுப்பிய திமுக உறுப்பினர் சம்பத் கூறுகையில், "மூன்று வேளையும் தயிர்சாதம் தருகிறார்கள். இதனால் ஜிப்மர் நோயாளிகள் டயட் உணவு இல்லாமல் பாதிப்பில் உள்ளனர்" என்றார்.

ஜிப்மர் இடம் பெற்றுள்ள தொகுதியின் எம்எல்ஏ ஏகேடி ஆறுமுகம் கூறுகையில், "டிரான்ஸ்பர் பாலிசியால் 15 ஆண்டுகளாக கேன்டீன் பணிபுரிவோர் வேறு இடத்துக்கு ஜிப்மரில் மாற்றி உள்ளனர். அதனால் யாரும் பணிக்கு செல்லவில்லை. தற்போதைய இயக்குநர் யார் சொன்னாலும் எதையும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. நோயாளிகள் வேதனைப்படுகிறார்கள். முதல்வர் இதில் தலையிட்டு தீர்வு காணவேண்டும்" என்றார். பேரவைத்தலைவர் செல்வம், இதுபற்றி முதல்வர் விரைவில் பதில் சொல்வார் என்று கூறினார்.

x