மின்சார ரயில்கள் ரத்து: தாம்பரம் பஸ் நிலையத்தில் அலைமோதும் மக்கள்


தாம்பரம் பஸ் நிலையத்தில் அலைமோதிய மக்கள்.

தாம்பரம்: பராமரிப்புப் பணி காரணமாக சென்னை பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் மார்க்கமாக கூடுவாஞ்சேரி வரையும் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம்மார்க்கமாக பல்லாவரம் வரையும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கடந்த 2 வாரங்களாக விடுமுறை நாட்களில் மட்டும்ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக வேலை நாளான நேற்று (ஆக.5) பராமரிப்புப் பணி காரணமாக சென்னை பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் மார்க்கமாக கூடுவாஞ்சேரி வரையும், கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் மார்க்கமாக பல்லாவரம் வரையிலான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

வரும் ஆக.14 வரை தினமும் காலை 9.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை பல்லாவரம் மற்றும் கூடுவாஞ்சேரி இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

போதிய பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் நிலை ஏற்பட்டது. செங்கல்பட்டில் இருந்து பல்லாவரம் வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்த நிலையில், ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தாம்பரத்திலிருந்து பிற பகுதிகளுக்கு செல்வதற்காக பொதுமக்கள் அதிக அளவில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் குவிந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

வரும் பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு மக்கள் பயணித்தனர். பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்புக்காகவும் 175 போலீஸார் பணிகளில் ஈடுபட்டனர்.

x