திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூரில் கனமழை : கோயில்கள், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்


திருச்சியில் ஹோலிகிராஸ் கல்லூரி அருகே மதுரை சாலையில் தேங்கிய மழைநீரில் தத்தளித்து சென்ற வாகனங்கள். படங்கள்: ர.செல்வமுத்துகுமார்.

திருச்சி / கரூர் / பெரம்பலூர் / அரியலூர்: திருச்சி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், திருச்சி மாநகர் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 16, 17-ம் தேதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து 19-ம் தேதி இரவு நல்ல மழை பெய்தது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை 4 மணியிலிருந்து வானம் இருண்டு காணப்பட்டது. 5 மணிக்கு மேல் திருச்சி மாநகரில் கனமழை பெய்யத் தொடங்கியது.

இதனால், திருச்சி கன்டோமென்ட் பகுதி, மேஜர் சரவணன் ரவுண்டானா, ஐயப்பன் கோயில், பீமநகர், மெயின்கார்டு கேட், ராமகிருஷ்ணா பாலம், பாலக்கரை, கீழரண்சாலை, காந்தி மார்க்கெட், உறையூர், ஸ்ரீரங்கம் சுதர்சன்நகர் உட்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கருமண்டபம் அசோக் நகர், சோழகநகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்துக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் போலீஸார் செய்வதறியாது திகைத்தனர். அதேபோல, மேலப்புதூர் ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

இது குறித்து திருச்சி மாநகராட்சி நகரப் பொறியாளர் (பொ) சிவபாதம் கூறியது: கருமண்டபம் பகுதி பெரும்பாலும் களிமண் என்பதால் மழைநீர் பூமிக்குள் செல்ல சிறிது நேரம் எடுக்கும். கருமண்டபம் திருச்சி-திண்டுக்கல் பிரதான சாலையில், புதிய வடிகால் வாய்க்கால்களிலிருந்து இரும்பு கம்பிகளை அகற்றியதை தொடர்ந்து மழைநீர் வடியத் தொடங்கி உள்ளது. ஹோலிகிராஸ் கல்லூரி சாலை, மேலப்புதூர் சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரை வடிய வைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையில் நனைந்தபடி சென்ற வாகனங்கள். படங்கள்: ர.செல்வமுத்துகுமார்.

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால், வேப்பமரம் வேரோடு சாலையில் சாய்ந்து எதிரே உள்ள ஓட்டலில் விழுந்தது. இதனால் ஓட்டலில் ஒரு பகுதி சேதமடைந்தது. மணப்பாறையில் நேற்று மாலை பெய்த மழையால் ராஜீவ் நகர் குடியிருப்பு பகுதிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து நின்றது. சொக்கலிங்கபுரம் தூய்மைப் பணியாளர் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். நகராட்சி நிர்வாகம் வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டது. லால்குடி, துறையூர், துவரங்குறிச்சி, புத்தாநத்தம், முசிறி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்திலும், மண்ணச்சநல்லூர் பூலோகநாதர் கோயிலுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம், புலிவலம், அயிலாப்பேட்டை, கோப்பு, குழுமணி பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்தது. மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அயிலை சிவசூரியன் தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நேற்று தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கரூர்பசுபதீஸ்வரர் கோயில் சுற்று பிரகாரத்துக்குள் மழைநீர் புகுந்து, 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால் பக்தர்கள் அவதியடைந்தனர். இதேபோல, தாந்தோணிமலை குறிஞ்சி நகர், எஸ்.பி. காலனி உள்ளிட்ட பகுதிகளில் 20 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. கரூர்- திருச்சி சாலையில் பசுபதிபாளையம் பிரிவு அருகேயுள்ள தெரசா முனை பகுதியில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூரை அடுத்த கீழப்பழுவூரில் அரியலூர் சாலையில் தேங்கிய மழைநீரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். படம்: பெ.பாரதி

கிருஷ்ணராயபுரம், மயிலம்பட்டி, மாயனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): கரூர் 113, மயிலம்பட்டி 32, கிருஷ்ணராயபுரம் 17.50, மாயனூர் 16, கடவூர் 5, க.பரமத்தி 3.40, பஞ்சப்பட்டி மற்றும் பாலவிடுதி தலா 3.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் பெரம்பலூர் நகரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த மழையைத் தொடர்ந்து விவசாயிகள் கோடை உழவு பணிகளை தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பாடாலூர் 17, புதுவேட்டக்குடி, வேப்பந்தட்டை தலா 9, எறையூர் 6, செட்டிக்குளம், வி.களத்தூர் தலா 5.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணிக்கு மேல் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், திருமானூர், கீழப்பழுவூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியது. இதில், அரியலூர் மற்றும் செந்துறை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில், நேற்று காலை 6 மணி முதல் மாலை 5.30 வரையிலான நேரத்தில் அரியலூரில் 23 மில்லி மீட்டரும், செந்துறையில் 21 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

x