மழையை சந்திக்க அரசு தயார்: கொளத்தூர் தொகுதியை ஆய்வு செய்தபின் முதல்வர் ஸ்டாலின் உறுதி


சென்னை தணிகாசலம் நகரில் நடைபெற்றுவரும் உபரிநீர் கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை நேற்று ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் உள்ளிட்டோர்.

சென்னை: கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.355.23 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.8.45 கோடியிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்து, ரூ.3.25கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில் கொளத்தூர், கணேஷ் நகரில் ரூ.110.92 கோடியில் அமைக்கப்படும் துணை மின்நிலைய கட்டுமானப் பணியை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கொளத்தூர், வீனஸ் நகரில் ரூ.19.56 கோடியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வெளியேற்று நிலையப் பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின், கொளத்தூர், பள்ளி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கார சென்னை 2.0 நிதியின் கீழ், சென்னை மேல்நிலைப் பள்ளி மற்றும்ஆரம்பப் பள்ளியில் ரூ.5.04 கோடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடம், 2 குழந்தைகள் வளர்ச்சி மையங்கள், ஜி.கே.எம். காலனி 27-வதுதெருவில் ரூ.2.55 கோடியில் சென்னை தொடக்கப்பள்ளி கட்டிடம், கொளத்தூர் தொகுதியில் பல்வேறு தெருக்களில் ரூ.86 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 உயர் மின்கோபுர விளக்குகள் என ரூ.8.45 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

மேலும், கொளத்தூர்சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சீனிவாச நகர்3-வது பிரதான சாலையில் ரூ.3.25 கோடியில் கட்டப்படவுள்ள சென்னை தொடக்கப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, சிஎம்டிஏ சார்பில் கொளத்தூர் நேர்மை நகரில் 0.73 ஏக்கர் பரப்பில் ரூ.23.50 கோடியில் கட்டப்படும் நவீன சந்தையின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

இக்கட்டிடம், 2 தளங்களுடன், 62,200சதுர அடியில் அமைகிறது. அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடமும், 2 தளங்களில் 99 கடைகளும் அமைய உள்ளன. தொடர்ந்து, நீர்வள ஆதாரத் துறை சார்பில் அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் நகரில் ரூ.91.36 கோடியில் உபரிநீர் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியைப் பார்வையிட்டார்.

அதன்பின், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் ரூ.109.89 கோடியில் தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மழையை சந்திக்க அரசு தயார்: கொளத்தூரில் ஆய்வின்போது மழை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் முதல்வர் அளித்த பதில்களும் வருமாறு:

வடகிழக்குப் பருவமழைக்கு எவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? இப்போது மழைபெய்துள்ள நிலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கு வதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கிறார்களே? - யார் சொல்கிறார்கள்? தண்ணீர் எங்கே தேங்கியிருக்கிறது என்று அவர்களை காட்டச் சொல்லுங்கள். எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் நேற்று 12 செமீ மழை பெய்துள்ளது. வரும்காலத்திலும் மழை அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதே? - எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திப்பதற்கு இந்த அரசு தயாராக உள்ளது. இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.

x