சென்னை: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சென்னை சத்தியமூர்த்தி பவனில்நூற்றுக்கணக்கானோர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் சட்டப்பேரவை முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். பின்னர் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்பும் அவர்கள் கோஷமிட்டனர்.
பின்னர் அவரிடம் புகார் கடிதம்அளித்தனர். அதில், “கார்த்திசிதம்பரம், அவரது ஆதரவாளர்கள், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் ஆகியோர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்தை நடத்தினர். அந்தக்கூட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அழைக்கப்படவில்லை. அந்தக் கூட்டத்தில் தாங்களும் கலந்து கொண்டீர்கள். அக்கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம் கட்சியை தனது சொத்துபோல நினைத்து கூட்டணியை உடைக்கும் வகையில் பேசியுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து மீ்ண்டும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கே.ஆர்.ராமசாமி, “சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 80 சதவீதம் பேருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை" என்றார்.
இதுபற்றி கார்த்தி சிதம்பரம் எம்.பி.யிடம் கேட்டபோது, "எனக்கு எதிராகப் புகார் கொடுத்தது பற்றி தெரியாது. இதைப்பற்றி எனக்கு ஒரு கருத்தும் கிடையாது. எந்தக் கருத்தும் இல்லை" என்று மட்டும் தெரிவித்தார்