ஏழை மக்களின் கண்ணீர் திமுக ஆட்சியாளர்களை சுட்டெரிக்கும்: பழனிசாமி குற்றச்சாட்டு


சென்னை: இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளிச் சீருடை வழங்கும் திட்டத்தில் திமுக அரசுசுணக்கம் காட்டுவதால் பாதிக்கப்பட்ட ஏழைகளின் கண்ணீர் திமுக ஆட்சியாளர்களைச் சுட்டெரிக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறைகூட குறித்த காலத்தில் தகுதியுள்ள பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலையை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்கியதில்லை. குறித்த நேரத்தில் நெசவாளர்களுக்குப் பணி ஆணை வழங்காமலும், தரமற்ற நூல்களை வழங்கி நெருக்கடியை ஏற்படுத்தி, வெளிமாநிலங்களில் இருந்து வேட்டி சேலைகளை வாங்கி நிலைமையை சமாளித்தது.

இதன் காரணமாக, தமிழக விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் வேலையில்லாமல், தங்களது தறிகளை எடைக்குப் போடும் சூழ்நிலையையும், கஞ்சி தொட்டி திறக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

இந்த ஆண்டு இலவச வேட்டி,சேலை திட்டத்தில் திமுக அரசு,குறித்த நேரத்தில் நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்காமலும், வெளிச் சந்தையில் தரமற்றநூல்களை விலைக்கு வாங்கியதாலும் ஏற்பட்ட இழப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்வதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

அதேபோல், இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 4 செட் சீருடைக்குப் பதில், 3 செட் சீருடைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் 4 செட்வழங்கியதாக கணக்கு காட்டுவதாகவும், இதன்மூலம் திமுக ஆட்சியாளர்கள், அரசுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்துவதாகவும் செய்திகள் வருகின்றன.

எனவே, மாணவர்களுக்கு காலத்தோடு 4 செட் இலவச சீருடைகளை வழங்க வேண்டும். வேட்டி, சேலைகளை பண்டிகை காலங்களில் குறித்த நேரத்தில் வழங்க வேண்டும். அந்த துணிகளை நெய்யும் பணிகளை தமிழக நெசவாளர்களுக்கே வழங்க வேண்டும்.

ஏற்கெனவே பருப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை நியாய விலைக் கடைகளில் குறித்த நேரத்தில் வழங்குவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுபோன்று, ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் திமுகஅரசின் சுயநலப் போக்குக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை.ஏழைகளின் கண்ணீர், திமுக ஆட்சியாளர்களை சுட்டெரிக்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

x