எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடையோரின் வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி சோதனை


திண்டுக்கல் / கரூர் / நாமக்கல்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நில மோசடிவழக்கு தொடர்பாக, அவருக்கு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

கரூர் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில்கைதான எம்.ஆர்.விஜயபாஸ்கர், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

முக்கிய ஆவணம் பறிமுதல்: இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக திண்டுக்கல் முனிசிபல் காலனி, தாடிக்கொம்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவன அலுவலகங்கள், குஜிலியம்பாறை அருகே லந்தக்கோட்டையில் உள்ளதனியார் நூற்பாலையில் சிபிசிஐடிபோலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். மேலும், நிலமோசடி தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, கரூர் மாவட்டம் முஷ்டகிணத்துப்பட்டியைச் சேர்ந்தஒப்பந்ததாரர் மணி என்பவரது வீட்டில் சிபிசிஐடி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். இவர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினராவார். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர், ஒப்பந்ததாரர் மணியுடன் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டிருந்ததால், மணியின் தோட்டத்து வீட்டில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

கட்டுமான அலுவலகத்தில்... நாமக்கல் மோகனூர் சாலை கலைவாணி நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (55). கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். திருச்சிசாலை பிள்ளையார் கோயில் தெருவில் இவரது அலுவலகம் அமைந்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் அரசுக் கட்டிடங்களைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், பெரியமணலி அருகே கிரஷர் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல்சிபிசிஐடி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில், நாமக்கல் மற்றும் கரூர் சிபிசிஐடி போலீஸார் நேற்று காலை பாலகிருஷ்ணனின் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் கலைவாணி நகரில் உள்ள அவரது வீட்டில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் போலீஸார் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

x