திருச்சி: கொள்ளிடம் ஆற்றில் தடுப்புச் சுவர் உடைந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில், சிறந்த பொறியாளர்களை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி திருவானைக்கோவில் நெ.1 டோல்கேட் பகுதியை இணைக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலத்தின் கீழ் ரூ.6.55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரின் ஒரு பகுதி உடைந்தது. அதன் அருகே இருந்த 2 உயர் மின் அழுத்தக் கோபுரங்கள் ஆற்றில் சரிந்து விழுந்தன. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்புச் சுவர் இடிந்த இடங்களை அதிமுகவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, முன்னாள் அரசு கொறடா மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ., பரமேஸ்வரி, சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான் உட்பட பலர் கொள்ளிடம் ஆற்றின் தடுப்புச் சுவர் உடைந்த பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில் பரஞ்சோதி செய்தியாளர்களிடம் கூறியது: "திருச்சி திருவானைக்கோவில் கொள்ளிடம் ஆற்றில் நேப்பியர் வடிவ பாலத்தின் கீழே, 6.55 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர், சாதாரண வெள்ளத்திற்கே உடைந்திருக்கிறது. இதில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டறிய, இது குறித்து ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில், சிறந்த பொறியாளர்களை கொண்ட ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ஒரு வாரத்துக்குள் இக்குழுவை அமைக்காவிட்டால், கட்சி மேலிடம் அனுமதி பெற்று, அதிமுக சார்பில் திருச்சியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்" என்று பரஞ்சோதி கூறியுள்ளார்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது: "கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலத்தின் கீழே கட்டப்பட்டுள்ளது தடுப்பணை அல்ல. புதிய பாலத்தின் கீழ் தூண்கள் அமைந்துள்ள பகுதியில் மண் அரிப்பு ஏற்படாமலிருப்பதற்காக குறைந்த செலவில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் அது.
கடந்த சில தினங்களாக கொள்ளிடத்தில் சென்ற அதிக அளவிலான தண்ணீர் காரணமாக ஆற்றின் இயற்கையான நீரோட்டம் உள்ள பகுதியில் அமைந்துள்ள தடுப்புச் சுவர் மற்றும் சிறிது நீளத்துக்கு சரிந்து உள் வாங்கியுள்ளது. ஆனாலும் பாலத்தின் கீழ் பகுதியில் மண் அரிப்பு ஏற்படாமல் மண் தேங்கியுள்ளது. இதனால் தடுப்புச் சுவர் கட்டியதன் நோக்கம் வீண்போகவில்லை" என்று நெடுஞ்சாலைத்துறையினர் கூறியுள்ளனர்.