நூலிழையில் கிட்டிய வெற்றி! - நெல்லை மேயர் தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் செய்த ‘சம்பவம்’


கோ.ராமகிருஷ்ணன், பி.எம்.சரவணன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர் நூலிழையில் வெற்றிப் பெற்றிருக்கிறார். அவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் வாக்களித்துள்ள விவகாரம் அக்கட்சியின் தலைமை நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக உட்கட்சி மோதலில் ஏற்கெனவே மேயராக இருந்த பி.எம்.சரவணன் மாற்றப்பட்டு தற்போது கோ.ராமகிருஷ்ணன் மேயராக தேர்வு செய்யப்பட்டாலும், இம்மாநகராட்சி பிரச்சினை தீராது என்றே தெரிகிறது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயராக இருந்த பி.எம்.சரவணன் மற்றும் பாளையங்கோட்டை எம்.எல்.ஏ.அப்துல் வகாப் இடையே நிலவிய பனிப்போர் காரணமாக கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். திருநெல்வேலியில் நிலவும் திமுக கோஷ்டி பூசலுக்கு முடிவுகட்டும் வகையில் புதிய மேயரை தேர்வு செய்ய கட்சியின் மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் திருநெல்வேலியில் முகாமிட்டனர். அப்போது திமுக கவுன்சிலர்களை அழைத்து அமைச்சர்களும், நிர்வாகிகளும் சமரசம் பேசியிருந்தனர். இந்த கூட்டத்தில் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் பங்கேற்கவில்லை.

போட்டியின்றி மேயரை தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சி தலைமை பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டிருந்த நிலையில், திமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் போட்டி வேட்பாளராக பவுல்ராஜ் மேயர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தார். இதனால் கட்சி தலைமைக்கு தலைவலி ஏற்பட்டது. திருநெல்வேலியிலேயே முகாமிட்டிருந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, அப்துல்வகாப் எம்எல்ஏவை மாநகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பி திமுக வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.

பவுல்ராஜ் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு அப்துல்வகாப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. தொடக்கத்தில் மாநகராட்சி அலுவலகத்துக்கு வராத ராஜினாமா செய்த மேயர் பி.எம்.சரவணன், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் வாக்குப் பதிவுக்கு முன் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கட்சி அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர் ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்றார். அதே நேரத்தில் போட்டி வேட்பாளர் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று கடும் நெருக்கடியை அளித்திருந்தார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக வாக்களித்த 13 திமுக கவுன்சிலர்கள் யார் என்ற கேள்வியை திமுக மேலிடம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் கேட்டுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மத்திய மாவட்ட டிபிஎம் மைதீன்கான் மற்றும் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு கட்சி கவுன்சிலர்கள் சிலர் விசுவாசமாக செயல்படுவது குறித்து பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன.

திமுகவின் கட்டுப்பாட்டில் அவர்கள் இல்லை என்பது தெளிவாகியுள்ள நிலையில் புதிய மேயருக்கு எந்த அளவுக்கு இவர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று தெரியவில்லை. சரவணன் மாறி ராமகிருஷ்ணன் வந்தாலும் திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தை சரிவர நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பது மட்டும் இப்போது தெரிகிறது.

x