பணி நிரந்தரம் கோரி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சென்னை குடிநீர் வாரிய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள்.

சென்னை: பணி நிரந்தரம் கோரி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர்கள், சிந்தாதிரிபேட்டையில் உள்ள வாரிய அலுவலக வளாகத்தில் இன்று (ஆக.5) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை குடிநீர் வாரியத்தில் 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை நேரடியாக தினக் கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் குடிநீர் இணைப்பு வழங்குதல், கழிவுநீர் அகற்றுதல், அடைப்புகளை நீக்குதல், ஜெட் ராடிங் மற்றும் தூர்வாரும் இயந்திரங்களை இயக்குதல், சூப்பர் சக்கர் வாகனத்தை இயக்குவது போன்ற பணிகளில் 2 ஆயிரத்து 850 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், வாரியத்தில் பணியாற்றும் 2 ஆயிரத்து 850 தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆலந்தூர் மண்டலத்தில் பணியாற்றும் 17 பேரை நிரந்தரம் செய்ய காஞ்சிபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த வேண்டும். 2003ம் ஆண்டில் இருந்து குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை குடிநீர் வாரிய தொழிலாளர் சங்கம் சார்பில், சென்னை சிந்தாதிரி பேட்டையில் உள்ள வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவர் க.பீம்ராவ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "குடிநீர் வழங்குவது, கழிவுநீர் அகற்றுவது, சுகாதாரப் பணிகளை எந்த நிலையிலும் தனியாருக்கு கொடுக்கக் கூடாது. சென்னை குடிநீர் வாரியத்தில் 10 ஆயிரம் பேர் பணியாற்றிய இடத்தில் தற்போது 4 ஆயிரம் பேர்தான் உள்ளனர். தொழிலாளர்கள் மீது கடுமையான பணிச்சுமை திணிக்கப்படுகிறது. 480 நாட்கள் பணியாற்றினால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை ஆட்சியாளர்களும், பொதுத்துறை நிறுவனங்களும் மீறுகின்றன.

சென்னை குடிநீர் வாரிய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார் சிஐடியூ மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன். உடன் சங்கத் தலைவர் பீம்ராவ் உள்ளிட்டோர்.

தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து வகையான நீதிமன்ற மேல்முறையீடுகளையும் அரசு திரும்பப் பெற வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலியை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்" என்று சவுந்தரராசன் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வயநாடு நிவாரண நிதியாக சங்கம் சார்பில் ரூ.7 ஆயிரத்து 280 வழங்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாரிய தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எம்.பழனி, பொருளாளர் இ.ராஜன், துணைத் தலைவர் சி.சத்யநாதன், துணைச் செயலாளர் எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வாரிய பொதுமேலாளரை சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்தனர்.

x