மதுரை மாநகராட்சி துணை மேயர் மீது தொடரும் சர்ச்சைகள்: பின்னணி என்ன?


மதுரை துணை மேயர் நாகராஜன் | கோப்புப் படம்

மதுரை: மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மீது, கடந்த 2 ஆண்டாகவே அடுத்தடுத்து சர்ச்சைகளும், புகார்களும் ஏற்பட்டு வருகிறது. அவர் மீதான இந்த பிரச்சனைகளுக்கு, அவர் மீதான அரசியல் காழ்புணர்ச்சியா, தனிப்பட்ட பகை காரணமா என்பது பற்றி உளவுத் துறை போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மதுரை மாநகராட்சி துணை மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகராஜன் உள்ளார். இவர் வெற்றிப் பெற்ற வார்டில் உள்ள திமுக - பாஜகவினருக்கும், இவருக்கும் இடையே உள்ளாட்சித் தேர்தல் முதல் அரசியல் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்த பகை, துணை மேயருக்கு, மாநகராட்சி அலுவலகம் வரை தொடர்ந்தது. அரசியல் ரீதியான தூண்டுதலின் பேரில் புதிய கட்டிடங்கள் திறப்பு, பணிகள் அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டுகளில் தனது பெயர் புறக்கணிக்கப்படுவதாக, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துணை மேயர் நாகராஜன் போராட்டங்களில் ஈடுபட்டார்.

விரக்தியடைந்த துணை மேயர் நாகராஜன், ஒருமுறை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணி முன்னிலையிலேயே மாநகராட்சி நிர்வாகப் பணிகள், நிகழ்ச்சிகளில் தான் புறக்கணிக்கப்படுவதாக பகீரங்கமாக குற்றம்சாட்டினார். வார்டுகளில் தனியாக ஆய்வுகளுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேயர் இந்திராணிக்கும், துணை மேயர் நாகராஜனுக்கும் இடையே நீடித்த இந்த மோதல் விவகாரம், மக்களவைத் தேர்தலுக்கு முன் சமூகமாக நீடித்த மதுரை திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்படும் அளவிற்கு சென்றது. அதன் பிறகு இரு கட்சி மூத்த நிர்வாகிகளும் பேசி, மேயர், துணை மேயர் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர். கல்வெட்டுகளில் துணை மேயர் பெயர் இடம்பெறத் தொடங்கியது.

ஆனாலும், துணை மேயர் நாராஜனுக்கு, அவரது வார்டில் உள்ள திமுகவினரும், பாஜகவினரும் தற்போது வரை அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல், துணை மேயர் மீது அடிக்கடி சர்ச்சைகளும், புகார்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் துணை மேயர், மாநகராட்சி அனுமதி பெறாமல் வீடு கட்டியதாவும், மாநகராட்சி பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டியதாகவும், ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளரிடம் அடுத்தடுத்து புகார் தெரிவிக்கப்பட்டன.

மேலும், உயர்நீதிமன்றத்திலும், இரு தரப்பினரும் மாறிமாறி வழக்கு தொடர்ந்து தற்போது அந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்த சூழ்நிலையில் இன்று மற்றொரு குற்றச்சாட்டாக துணை மேயர் நாகராஜன் மீது மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா ஆட்சியரியரிடம் புகார் தெரிவித்தார்.

புகாரில் மனுவில், "கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் வசந்தா தனது வீட்டை அடமானமாக வைத்து ரூ.10 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கினேன். சில நாட்களுக்கு முன்பாக கடனை முழுமையாக செலுத்தி விடுகிறேன் என்ற பிறகும், கூடுதல் பணம் கேட்டு வீட்டு கடன் பத்திரத்தை ரத்து செய்ய மறுத்தார்.

துணை மேயர் நாகராஜன், அவரது தம்பி டி.ராஜேந்திரன், அவரது நண்பர்கள் ஆகியோர் வட்டிக்கு பணம் கொடுத்த நபர்களுக்கு ஆதரவாக என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். மேலும், ஆபாசமாக பேசுகிறார். கீழே கிடந்த கல்லை எடுத்து எங்கள் மீது வீசி தாக்க முயன்றார். எங்களுக்கும், எங்கள் சொத்துக்கும் பாதுகாப்பு வழங்கி நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் காவல் நிலையத்தில் துணை மேயர் மீது கொடுக்கப்படும் இந்த குற்றச்சாட்டுகளும், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கொடுக்கப்படுகிறதா? தனிப்பட்ட விரோதம் காரணமா என உளவுத் துறை போலீஸார் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.

துணை மேயர் பதவியில் அப்புறப்படுத்த நடக்கும் அரசியல் காழ்புணர்ச்சி: துணை மேயர் நாகராஜனிடம் கேட்டபோது, "உள்ளாட்சித் தேர்தல் முதலே பாஜகவினர், என் மீதான அரசியல் காழ்புணர்ச்சியால் அவர்கள் தூண்டுதலின் பேரில் அடுத்தடுத்து என் மீது புகார் தெரிவிக்க வைக்கப்படுகின்றனர். அது அனைத்தும் பொய் என்பதால் நான் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். எப்படியாவது என்னை துணை மேயர் பதவியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.

மேலும், வார்டில், நான் நேர்மையான அரசியல், மக்கள் பணி பார்க்கிறேன். அதுவும் பிடிக்கவில்லை. நான் கம்யூனிஸ்ட் கொள்கை சித்தாந்தத்தோடு பணியாற்றி வருகிறேன். சிசிடிவியில் உள்ள வீடியோவில் சம்பவம் நடைபெற்ற நாளன்று தனது சகோதரனின் மீது முருகானந்தம் எச்சில் துப்பியதால், அது குறித்து கேட்பதற்காக நான் சென்றேன். கீழே குனிந்து எனது வாகன சாவியை எடுத்தேன். கல்லை எடுத்து எறிவதாக பொய் சொல்கின்றனர். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கவில்லை" என்று துணை மேயர் கூறினார்.

x