நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி போலீஸார் ரெய்டு


நாமக்கல்: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளருக்கு சொந்தமாக, நாமக்கல்லில் உள்ள அவரது கட்டுமான அலுவலகம் மற்றும் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

நாமக்கல் - திருச்சி சாலை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (55), நாமக்கல் - திருச்சி சாலையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும், பெரிய மணலி அருகில் கிரஷர் தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், நாமக்கல் சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நாமக்கல் மற்றும் கரூர் சிபிசிஐடி போலீஸார், நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள பாலகிருஷ்ணனின் அலுவலகத்திற்குள் அதிரடியாக இன்று நுழைந்தனர்.

அப்போது அங்குள்ள ஃபைல்கள், வங்கி கணக்குகள் மற்றும் கம்ப்யூட்டர் பதிவுகளை போலீஸார் சோதனை செய்தனர். மேலும் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி தீவிர சோதனை நடத்தினர். இதுபோல் நாமக்கல் - மோகனூர் சாலை கலைவாணி நகரில் உள்ள பாலகிருஷ்ணன் வீட்டிலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். பாலகிருஷ்ணன், சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் அரசுத் துறைகளுக்கு கட்டிடங்களை கட்டிக்கொடுத்து வருகிறார்.

இவர் தமிழக போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நிலமோசடி தொடர்பான வழக்கில் விஜயபாஸ்கர் கைதானதையடுத்து அதில் பாலகிருஷ்ணனுக்கும் தொடர்பிருக்காலம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பாலகிருஷ்ணன் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களை போலீஸார் கைப்பற்றி சென்றனர். இச்சம்பவத்தால் நாமக்கல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

x