மதுவிலக்குத்துறையை என் கண்காணிப்பில் விடுங்கள். சாராயத்தை ஒழித்து காட்டுகிறேன் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கிராமத்தில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்தனர். இதனால் இன்று மாலைவரை 13 பேர் உயிரிழந்தனர். 40 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல்கூறி, மருத்துவர்களிடம் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இச்சம்பவத்தை அரசின் தோல்வியாகப் பார்க்கிறேன். மதுவிலக்கை அமல்படுத்த பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். கள்ளச் சாராயத்தைத் தடுக்க இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளச்சாராயம் காவல்துறை, வருவாய்துறை மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தெரியாமல் ஒரு சொட்டுக்கூட விற்கமுடியாது. தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தை உருவாக்கியதற்கு காரணமே கள்ளச்சாராயத்தை நிறுத்ததான்.
ஒரு பக்கம் கள்ளச்சாராயம் மற்றொன்று உரிமம் பெற்று விற்கும் சாராயமாகும். கடந்த ஒரு ஆண்டில் டாஸ்மாக் மதுவினால் தமிழகத்தில் 5 லட்சம் பேர் இறந்துள்ளனர். நாம் இப்போது இறந்ததைப்பற்றி பரபரப்பாக பேசுகிறோம். தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்.
தமிழகத்தில் மதுவைக் குடிக்க இயலாத சூழலில் மீனவர்கள், விவசாயிகள் , கூலித் தொழிலாளிகள் வாழமுடியாது என்ற நிலையை திராவிடக்கட்சிகள் உருவாக்கியுள்ளன. ஒருவர் டாஸ்மாக் மதுவை குடிக்கவேண்டும் என்றால் ரூ 250 அல்லது ரூ 300 செலவிடவேண்டும். ஆனால் கள்ளச்சாராயத்திற்கு ரூ 50 செலவிட்டால் போதும்.
தமிழகத்தில் உள்ள மதுவிலக்குத்துறை அமைச்சர் மதுவை திணிக்கிறார். அதாவது திருமணம், விளையாட்டுபோட்டிகள், இயந்திரத்தின் மூலம் அரசு மதுவை திணித்துக்கொண்டுள்ளது. சமூக அக்கறை இல்லாத மதுவிலக்குத்துறை அமைச்சரை மாற்றவேண்டும். அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்றவேண்டும். இந்த தலைமுறை மது இல்லாமல் வாழமுடியாது என்ற நிலையை திராவிடக்கட்சிகள் உருவாக்கியுள்ளன.
தமிழக அரசு மதுவிலக்கு தொடர்பாக என்ன செய்யப்போகிறது என்பதை விளக்கவேண்டும். உணர்வுப்பூர்வமாக மதுவிலக்கை கொண்டுவரவேண்டும். தமிழகத்தில் ஏற்படும் விரும்பததகாத விவகாரங்களுக்கு காரணம் மதுதான் . அரசு விற்கும் சாராயத்தால் கள்ளச்சாராய இறப்பை விட ஆயிரம் மடங்கு அதிகம்.
தமிழகத்தில் 24 மணி நேரமும் சந்துக்கடைகளில் மதுவிற்கப்படுகிறது. டாஸ்மாக் மதுபானம் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. இது மிகப்பெரிய ஊழலாகும். எல்லாம் நடந்த பிறகு நேரில் வந்து முதல்வர் பார்ப்பதில் பயனில்லை. நடக்காமல் தடுப்பதுதான் அரசின் கடமையாகும்.
தமிழகம் மற்றும் ஜிப்மரில் கூட Methyl alcohol poisoning antidote என்ற மருந்து இல்லை. அது இருந்திருந்தால் உயிரிழப்பைத் தடுக்க முடியும். இந்தமருந்துகள் வெளிநாடுகளில் உள்ளன. தமிழகத்தில் சாராயம் இருக்கக்கூடாது என்று முதல்வர் சொல்லியிருந்தால் மதுவிலக்குத்துறையை என் கண்காணிப்பில் விடுங்கள். அவரின் லட்சியத்தை நிறைவேற்றுவேன். மதுவிலக்கை குஜராத், பீகாரில் நடைமுறைபடுத்தும்போது இங்கு ஏன் நடைமுறைப்படுத்த முடியாது? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.