நம்பியூரில் 2-ம் நாளாக கனமழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பாதிப்பு


நம்பியூரை அடுத்த வேமாண்டம்பாளையம் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள பழுதடைந்த தரைப்பாலத்தை மூழ்கடித்து மழை வெள்ள நீர் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்றும் கனமழை பெய்ததால் குளக்கரையை ஒட்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு நகர் பகுதியில் குறைவான மழைப்பொழிவு இருந்தாலும், பெருந்துறை, நம்பியூர், சத்தியமங்கலம், தாளவாடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நம்பியூரை அடுத்த வெள்ளாளபாளையம், கெடாரை, பழனிகவுண்டன் புதூர், குப்பிபாளையம் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன் தினம் இரவு வரை தொடர் மழை பெய்தது.

இதனால், சந்தன நகர் பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவிலான குளம் நிரம்பியது. தொடர்ந்து கனமழை பெய்ததால், குளம் உடைந்து, நம்பியூரில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை நீர் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த பொதுமக்களை அரசுப் பள்ளியில் தங்க வைத்த அதிகாரிகள் இரவு உணவு வழங்கினர்.

போக்குவரத்து பாதிப்பு: இந்நிலையில், நேற்று மாலை 3 மணி முதல் இப்பகுதியில் தொடர் கனமழை பெய்தது. இதனால், இப்பகுதியில் உள்ள தரைப்பாலங்களில் வெள்ள நீர் வழிந்தோடுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நம்பியூரை அடுத்த வேமாண்டம்பாளையம் குளத்துப் பாளையம் பகுதியில் உள்ள பழுதடைந்த தரைப் பாலத்தை மூழ்கடித்து மழை நீர் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன மழை தொடர்வதால், மலைப்பாளையம், கோமங்காட்டு பாளையம், பிலியம்பாளையம் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வேமாண்டம்பாளையம் குளம் மற்றும் செட்டியம்பதி குளம் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் அருகே தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

நம்பியூர் ஏரிக்காட்டுப்பள்ளம் பகுதியில் விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், 1,000 வாழை மரங்கள் சேதமடைந்தன. நம்பியூர் அடுத்த பழனிகவுண்புதூர் பகுதியில் பெய்த கனமழையால் தரைப் பாலம் முற்றிலும் மூழ்கியது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் பாலத்தை கடக்க முயற்சித்த போது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். ஊர் மக்கள் கயிறு கட்டி அவரை பத்திரமாக மீட்டனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் தாளவாடியில் அதிகபட்சமாக 71 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேபோல் மாவட்டத்தின் பிறப் பகுதிகளில் பெருந்துறை 57, அம்மாப்பேட்டை 35.20, நம்பியூர் 26, பவானி 24, சென்னிமலை 18, கவுந்தப்பாடி 12, வரட்டுப் பள்ளம் 9.20, சத்தியமங்கலம் 7, கொடிவேரி மற்றும் ஈரோடு 6.30 மி.மீ, மொடக்குறிச்சி, கொடுமுடி தலா 4 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

x