3வது வரை மட்டுமே படிப்பு; தினமும் சைக்கிளில் ஆய்வு - வியக்கவைக்கும் நெல்லையின் புதிய மேயர்!


திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். தினமும் சைக்கிளில் சென்று தனது வார்டை சுற்றிப்பார்த்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார் இவர். மூன்றாவது முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு இம்முறை மேயர் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிட்டு என்ற ராமகிருஷ்ணன், இன்று காலை வழக்கம் போல் சைக்கிளிலேயே வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நேரத்தில் திமுகவில் அதிருப்தி வேட்பாளர் பவுல்ராஜ் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து கிட்டு என்ற ராமகிருஷ்ணன் மற்றும் பவுல்ராஜ் போட்டியில் இருந்தனர். இதில் கிட்டு 30 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதையடுத்து நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக ராமகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயராகியுள்ள கிட்டு என்ற ராமகிருஷ்ணன் 3ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இவர் 25வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு நெல்லை மாநகராட்சியில் திமுக கவுன்சிலராக ராமகிருஷ்ணன் தேர்ந்து எடுக்கப்பட்டார். அப்போது, மாநகர மக்களின் பிரச்சினைகளுக்காக மாமன்றத்தில் தீவிரமாக குரல் கொடுத்ததில் கவனம் பெற்றார்.

கிட்டு ராமகிருஷ்ணன் மிகவும் எளிமையான நபராக திருநெல்வேலி முழுவதும் அறியப்படுகிறார். பைக் ஓட்டத்தெரியாது என்பதால் ராமகிருஷ்ணன் சைக்கிளில் வலம் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர் தினமும் காலை 7 மணிக்கு தனது சைக்கிளில் வார்டு முழுவதும் பயணம் செய்வார்.

காலையில், தூய்மை பணியாளர்கள் மூலம் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டு உள்ளதா? வீடுகள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டு குறைகள் இருந்தால் உடனுக்கு உடன் பிரச்சினையை சரி செய்வாராம். அதேபோல மாலையில் மீண்டும் சைக்கிளில் சென்று தெருவிளக்குகள் சரியாக எரிகிறதா? என்று கண்காணிக்கின்றார். இதனால் மிகவும் எளிமையான முறையில் மக்களால் அணுகக்கூடிய நபராக ராமகிருஷ்ணன் இருக்கிறார் என நெல்லை மாநகராட்சி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள வேணுவன குமார கோவில் தெருவில் வசித்து வரும் ராமகிருஷ்ணனுக்கு, காந்திஸ்வரி என்ற மனைவியும், மகாராஜன் என்ற மகனும் உள்ளனர்.

x