கோவை மாநகராட்சியின் திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிப்பு!


கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி மேயராக பதவி வகித்து கல்பனா ஆனந்தகுமார் கடந்த மாதம் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய மேயரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து திமுக சார்பில் யார் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சியில் 96 இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வென்றுள்ளனர். எனவே அறுதிப்பெரும்பான்மையுடம் திமுக அறிவிக்கும் வேட்பாளர் மேயராகும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், புதிய மேயரை தேர்வு செய்ய, திமுக கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கோவை மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையின் முடிவில், கோவை மாநகராட்சியின் 29-வது வார்டு திமுக கவுன்சிலரான ரங்கநாயகி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இவர் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இதேபோல நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுகவின் கவுன்சிலர் ராமகிருஷ்ணன் (எ) கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் கடந்த ஜூலை 3 ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கும் மேயர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது.

x