சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று ஆர்ப் பாட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: திமுக ஆட்சியில் ஒரே மாதத்தில் 130-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. கொலையாளிகள் அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். இளைஞர்களை திமுக குற்றச் சமூகமாகவே மாற்றிவிட்டது. அதிக கொலைகள் போதையில்தான் நடைபெறுகின்றன. நடப்பாண்டில் 595 கொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

38 குழுக்கள்: தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. குற்றச் செயல்களுக்கு கடும் தண்டனை இல்லாததால், குற்றங்கள் தொடர்கின்றன. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு 38 குழுக்களை அமைத்துள்ளது.

நீட் தேர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை தொடர்பான குழுக்கள் அளித்த பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மத்திய, மாநில அரசுகளைவிட தனியார் நிறுவனங்களிடம்தான் அதிக மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், விரைவில் மின் விநியோகத்துக்கும் வந்துவிடும். தமிழகத்துக்கு தொழிலதிபர் அதானி வந்த விவரத்தை வெளிப்படுத்த அரசுதயங்குவது ஏன்? காட்டுப்பள்ளி துறைமுகத்தை நிச்சயம் அதானியால் கட்டிவிட முடியாது.

அது எங்கள் மண், இனம்சார்ந்த பிரச்சினை. இவ்வாறு சீமான் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சிநிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மின் கட்டண உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கோஷமெழுப்பினர்.

x