நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதன் மூலம் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் மேயராவது உறுதியாகியுள்ளது.
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. இதுகுறித்து மாமன்ற உறுப்பினர்கள், மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் தனது பதவியை முடிவு செய்ய மேயர் பி.எம்.சரவணன் முடிவு செய்தார்.
இதன்படி தனது பதவியை ராஜினாமா செய்து விலகல் கடிதத்தை ஜூலை 8-ம் தேதி மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ராவிடம் வழங்கினார். இதையடுத்து அவரது கடிதம் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படும் தேதியில் மேயர் தேர்தல் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
இதையடுத்து புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் (ஆக. 5) இன்று நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்தார். இதற்கிடையே, நெல்லை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் திமுகவால் அறிவிக்கப்பட்டார். அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் மறைமுக தேர்தலில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இவர் நெல்லை மாநகராட்சியின் மூன்றாவது வார்டு கவுன்சிலராக உள்ளார். இதனை தொடர்ந்து அவர் மேயராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில், 44 இடங்கள் திமுக வசமே உள்ளன. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் இன்றைய மறைமுக தேர்தலில் திமுக எளிதில் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோக, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 7 மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் திமுகவிற்கு உள்ளது. அதிமுக சார்பில் 4 பேர் மட்டுமே நெல்லை மாமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.